செய்திகள்
கடும் போக்குவரத்து நெரிசலால் அணிவகுத்து நின்ற வாகனங்கள்.

தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2021-10-03 08:06 GMT   |   Update On 2021-10-03 08:06 GMT
முக்கிய சுற்றுலா இடங்களான குணா குகை, பைன் பாரஸ்ட், தூண்பாறை, கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
கொடைக்கானல்:

கொடைக்கானலில் தொடர் விடுமுறையால் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.

இதனால் கொடைக்கானல் நுழைவாயில் பகுதியில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனைச்சாவடியில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு மேல் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்தபடி சென்றன.

மேலும் கொடைக்கானல் நுழைவாயில் பகுதியில் உள்ள வெள்ளி நீர் வீழ்ச்சி அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளின் முன்பு நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். அவர்களின் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகையால் தங்கும் விடுதிகளின் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து லாட்ஜ் உரிமையாளர்கள் கூறுகையில், சங்கத்தில் உள்ள அனைத்து விடுதிகளிலும் அரசு வரன்முறை செய்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. சங்கத்தில் இல்லாத சிலர் அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு கூட்ட நெரிசலை பயன்படுத்தி அதிக தொகை வசூலித்து வருகின்றனர் என்றனர்.

நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தனர்.

முக்கிய சுற்றுலா இடங்களான குணா குகை, பைன் பாரஸ்ட், தூண்பாறை, கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அவர்களின் வாகனங்களால் பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது.

போலீசார் கவனம் செலுத்தி வாரவிடுமுறை மற்றும் தொடர்விடுமுறை நாட்களில் கொடைக்கானல் நுழைவாயில் பகுதி மற்றும் அதிக சுற்றுலா பயணிகள் குவியும் இடங்களில் கூடுதலாக போக்குவரத்து போலீசாரை பணியில் அமர்த்தி போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News