ஆன்மிகம்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகளை அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு

Published On 2020-11-02 08:24 GMT   |   Update On 2020-11-02 08:24 GMT
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகளை இந்து அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு செய்தார்.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்று. நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பட்ட இந்த திருத்தலத்தில் சிரம், உடல், பாதம் என மூன்று வாயில்கள் வழியாக பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலை விட பழமை வாய்ந்த இந்த கோவிலில் 400 ஆண்டுகளுக்கு மேலாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளது. எனவே கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு கடந்த 16 ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர் நேற்று திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு வந்தார். அவர் கும்பாபிஷேக திருப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவரிடம் பக்தர்கள் கூட்டமைப்பு சார்பில் புனரமைப்பு பணிகளை விரைவு படுத்தி உடனே கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு ஆணையர் பிரபாகர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், ‘ரூ.1.58 கோடி மதிப்பில் உபயதாரர் மூலம் கூடுதலாக பல பணிகள் நடத்த திட்டமிட்டு உள்ளது. மியூரல் ஓவியம் வரையும் பணிகள் தரமாக விரைவில் தொடங்கப்படும். கோவிலில் கொடி மரம் நிறுவும் பணிகள் துரிதப்படுத்தப்படும்’ என்றார்.

இந்த ஆய்வின் போது இணை ஆணையர் அன்புமணி, திருவட்டார் தாசில்தார் அஜிதா, கோவில் தந்திரி சஜீத் சங்கரநாராயணகுரு, கோவில் மேலாளர் மோகன் குமார், ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், அறநிலையத் துறை பொறியாளர் ராஜ்குமார், ஆதிகேசவ பெருமாள் சேவ அறக்கட்டளை தலைவர் அனந்த கிருஷ்ணன், மன்னர் குடும்பத்து பிரதிநிதி சைலஜா ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக குமரி மாவட்டத்திற்கு வந்த ஆணையர் பிரபாகரை நாகர்கோவில் விருந்தினர் மாளிகையில் வைத்து குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி மற்றும் உதவி ஆணையர் ரத்தனவேல் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து பிரபாகர், வடிவீஸ்வரம் முத்தாரம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து கும்பாபிஷேக திருப்பணிகள் குறித்து ஆய்வு செய்தார். இறுதியில் அவர் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார்.
Tags:    

Similar News