செய்திகள்
மத்திய அரசு

ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க ரூ.175 கோடி - மத்திய அரசு ஒப்புதல்

Published On 2020-11-03 22:10 GMT   |   Update On 2020-11-03 22:10 GMT
தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் ரேஷன்கடைகள் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதற்காக ரூ.174 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் பொதுமக்களில் பெரும்பாலானோர் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள். போதுமான ரத்தம் இல்லாததால் அவர்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு உள்ளது. இதனால் ரத்தசோகை உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த குறைபாட்டை போக்க ஊட்டச்சத்துக்களுடன் கூடிய செறிவூட்டப்பட்ட அரிசியை ரேஷன் கடைகள் மூலம் வழங்கும் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. செறிவூட்டப்பட்ட அரிசி என்பது இரும்புச்சத்து, போலிக் அமிலம் மற்றும் விட்டமின் ‘பி 12’ ஆகிய சத்துகள் கொண்டதாக இருக்கும். இவை உடலில் சேர்வதால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். ரத்தசோகை பிரச்சினையும் ஏற்படாது.

மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு தொடங்கியுள்ள இந்த திட்டம் சோதனை முறையில் தமிழகம், ஆந்திரா, குஜராத் மற்றும் மராட்டிய மாநிலம் உள்பட 15 மாநிலங்களில் தலா ஒரு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. 2019-2020-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 3 ஆண்டுகள் இந்த திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்படும்.

இதற்காக ரூ.174 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு மத்திய அரசு தற்போது ஒப்புதல் அளித்து உள்ளது.

இந்த திட்டம் தொடர்பாக கடந்த மாதம் 31-ந் தேதி நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று ரெயில்வே மற்றும் உணவு, நுகர்வோர் துறை மந்திரி பியூஷ்கோயல் கூறினார். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் மற்றும் மதிய உணவு திட்டத்தின்கீழ் 2021-2022-ம் ஆண்டில் இருந்து செறிவூட்டப்பட்ட அரிசியை நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கக்கூடிய வகையில், விரிவான திட்டம் தயாரிக்கும்படி இந்திய உணவு கழகத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News