செய்திகள்
வானதி சீனிவாசன்

அம்மா இரு சக்கர வாகன திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்- ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

Published On 2021-08-25 07:59 GMT   |   Update On 2021-08-25 07:59 GMT
தமிழ்நாட்டில் உள்ள உழைக்கும் மகளிருக்கு உதவிடும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் ‘அம்மா இருசக்கர வாகனத் திட்டம்’ என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
சென்னை:

பாரதிய ஜனதா தேசிய மகளிரணி தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அம்மா இருசக்கர வாகனத் திட்டம் 2016-ம் ஆண்டு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு, 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செயல்படத் தொடங்கியது.

இந்த திட்டத்தின்படி வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் இவற்றில் எது குறைவோ அந்தத் தொகை வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள உழைக்கும் மகளிருக்கு உதவிடும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் ‘அம்மா இருசக்கர வாகனத் திட்டம்’. உழைக்கும் பெண்கள் தங்கள் பணி இடங்களுக்கு எளிதில் செல்வதற்கு இந்த திட்டம் வழிவகை செய்கிறது.

பெண்களின் உழைப்பால்தான் பல குடும்பங்களில் அடுப்பெரிக்க முடிகிறது. வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கும் குடும்பப் பெண்களுக்கும் கூட, மாதம் ரூ.1000 வழங்குவதாக தெரிவித்த தி.மு.க. அரசு, இப்போது வேலைக்குச் செல்லும் மகளிருக்கு வழங்கிய சலுகையை ரத்து செய்வது ஏன்?

சுய தொழில் செய்பவர்கள், கடைகள், அரசாங்க நிதி உதவி பெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், ஆதரவற்ற மகளிர், மாற்றுத்திறனாளி பெண், கணவனை இழந்த ஆதரவற்ற பெண் போன்றோருக்கு முன்னுரிமை வழங்கும் மகத்தான திட்டத்தை அரசியல் காராணங்களுக்காக தடை செய்யாது இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News