ஆன்மிகம்
மருளாளிக்கு மாலை போடுவதற்காக மேட்டுத்தெரு பக்தர்கள் சார்பாக மாலையை யானையின் மீது வைத்து எடுத்துவந்த காட்சி.

திருச்சி புத்தூரில் உள்ள குழுமாயி அம்மன் கோவிலில் காளியா வட்டம்

Published On 2021-03-03 04:55 GMT   |   Update On 2021-03-03 04:55 GMT
திருச்சி புத்தூரில் உள்ள குழுமாயி அம்மன் கோவிலில் காளியா வட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருச்சி உய்யகொண்டான் வாய்க்கால் கரையில் ஆறு கண் பாலம் (தற்போது தொட்டி பாலம்) அருகில் அமைந்து உள்ளது குழுமாயி அம்மன் கோவில். சோழ மன்னர்களின் குல தெய்வமாக வணங்கப்பட்டு தற்போது திருச்சி நகர காவல் தெய்வமாக விளங்கும் குழுமாயி அம்மன் கோவில் வருடாந்திர தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இந்த ஆண்டு திருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் மறுகாப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று இரவு காளியாவட்டம் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பக்தர்கள் அம்மனை கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க புத்தூர் மந்தைக்கு அழைத்து வந்தனர். இன்று (புதன்கிழமை) சுத்த பூஜை நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டி குடித்தல் நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. இதனையொட்டி புத்தூர் மந்தையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருவார். அம்மனின் அருள் பெற்ற மருளாளியை (சாமி ஆடுபவர்) பக்தர்கள் மேளதாளம் முழங்க அழைத்து வருவர்.

அப்போது கொம்பு உள்ளிட்ட வாத்தியங்களும் இசைக்கப்படும். 2 பக்தர்களின் தோள் மீது அமர்ந்தபடி இருந்த மருளாளியை பக்தர்கள் ஊர்வலமாக தூக்கி கொண்டு வருவார்கள். அப்போது பக்தர்கள் நேர்த்திக்கடனாகவும், வேண்டுதலுக்காகவும் கொண்டு வந்திருந்த ஆட்டு கிடா குட்டிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

மந்தைக்கு முன் உள்ள தேரின் அருகில் மருளாளி வந்ததும் கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்ட ஆட்டுக்குட்டிகள் மருளாளியிடம் தூக்கி கொடுக்கப்படும். மருளாளி அவற்றின் ரத்தத்தை உறிஞ்சி குடித்து பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறுவார். அரசு சார்பில் மாவட்ட நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட ஆட்டு குட்டியின் ரத்தத்தை மருளாளி முதலில் குடிப்பார். அதனைத்தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட ஆட்டுக்குட்டிகள் பலியிடப்படும். நாளை மறுநாள் (வெள்ளிக் கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும், 6-ந் தேதி சாமி குடிபுகுதலும் நடைபெறும்.
Tags:    

Similar News