செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவுபடுத்த தயார்- தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில்

Published On 2021-11-23 09:57 GMT   |   Update On 2021-11-23 09:57 GMT
ஒரு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் மீது அவதூறு சொல்வதை ஏற்க இயலாது என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

தமிழக முதல்வராக இருந்த போது உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாட்களுக்கு பிறகு 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார்.

இதைத் தொடர்ந்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அப்போதைய மாநில அரசு சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை 2017-ம் ஆண்டு செப்டம்பரில் நியமித்தது.

இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும், தடை விதிக்கக் கோரியும் ஐகோர்ட்டில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அப்துல்நசீர் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

விசாரணையின்போது ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறது. தேவையில்லாமல் வழக்கு விசாரணைக்கு தங்களது மருத்துவர்களை இழுப்பதாக அப்பல்லோ நிர்வாகம் குற்றம் சாட்டியது.

மேலும் விசாரணை குழுவில் மருத்துவ நிபுணர்கள் இல்லை. மருத்துவர்கள் இல்லாத அந்த ஆணையத்தில் மருத்துவர்களை அழைத்து எப்படி விசாரிக்க முடியும் என்று தெரிவித்தது.



இதற்கு தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஒரு நல்ல மருத்துவமனையாகும். ஒரு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் மீது அவதூறு சொல்வதை ஏற்க இயலாது. ஆணையத்தின் செயல்பாட்டை அப்பல்லோ மருத்துவமனை தடுக்க நினைக்கிறது.

ஆணையம் என்பது உண்மையை கண்டறியும் குழுவே. நிபுணர் குழு அல்ல. நிபுணர்கள் குழுவில்தான் மருத்துவர்கள், நிபுணர்கள் இடம் பெற வேண்டும். ஆவணங்கள், ஆதாரங்களை திரட்டி அரசிடம் கொடுப்பதே ஆணையத்தின் பணியாகும். அதன் பிறகு அரசு நடவடிக்கை எடுக்கும்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான உண்மையை மக்களுக்கு சொல்வது மிக மிக முக்கியம் ஆகும். மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் விவரம் தெரிய வேண்டும். தேவைப்பட்டால் இந்த ஆணையத்தில் மருத்துவ வல்லுநர்களை சேர்க்கவும் தயாராக இருக்கிறோம்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவுப்படுத்தவும் அரசு தயாராக இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

Similar News