செய்திகள்
கோப்புப்படம்

கிழக்கு லடாக்கில் இருந்து இந்திய, சீன படைகள் வாபஸ் சுமுகமாக நடக்கிறது - சீனா அறிவிப்பு

Published On 2021-02-18 21:16 GMT   |   Update On 2021-02-18 21:16 GMT
கிழக்கு லடாக்கில் இருந்து இந்திய, சீன படைகளை விலக்கிக்கொள்ளும் நடவடிக்கை சுமுகமாக நடந்து வருகிறது என சீனா அறிவித்துள்ளது.
பீஜிங்:


கிழக்கு லடாக்கில் அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனா தொடர்ந்து அத்துமீறி வந்ததால், இந்திய படைகள் பதிலடி கொடுக்க நேரிட்டது. இரு தரப்பும் படைகளையும், தளவாடங்களையும் தொடர்ந்து குவித்ததால் அங்கு போர்ப்பதற்றம் நிலவி வந்தது. அங்கு அமைதியையும், சமாதானத்தையும் மீண்டும் ஏற்படுத்துவதற்காக இரு தரப்பிலும் ராணுவம் மற்றும் தூதரக மட்டத்தில் தொடர் பேச்சுவார்த்தைகள் நடந்தன.

அதன்பயனாக கிழக்கு லடாக்கில் பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தென்கரைகளில் இருந்து இரு தரப்பு படைகளையும் திரும்பப்பெற்றுக்கொள்வது என சமீத்தில் இந்திய, சீன ராணுவம் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இதை நாடாளுமன்றத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அங்கு படைகளை விலக்கிக்கொள்ளும் நடவ டிக்கையை இரு தரப்பும் தொடங்கி நடந்து வருகிறது. சீன துருப்புகள் விலக்கிக்கொள்ளப்படுவதையும், அவர்கள் தாங்கள் அமைத்திருந்த பதுங்குகுழிகளை அழிப்பதையும் காட்டும் வீடியோவை இந்திய ராணுவம் கடந்த செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்டது.

இதேபோன்று இருதரப்பு படைகளும் விலக்கிக்கொள்ளப்படும் நடவடிக்கை தொடங்கி விட்டதாக சீன ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் உ கியான் ஏற்கனவே கூறி இருந்தார்.

இந்த நிலையில் சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஹூவா சன்யிங், பீஜிங்கில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், “கிழக்கு லடாக்கில் படைகளை வாபஸ் பெறும் நடவடிக்கை எப்படி செல்கிறது?” என கேள்வி எழுப்பப்பட்டது.

அந்த கேள்விக்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

இரு தரப்பும் படைகளை வாபஸ் பெறும் நடவடிக்கை, மொத்தத்தில் சுமுகமாக நடக்கிறது. படைகள் வாபஸ் என்ற குறிக்கோளை அடைவதற்கு இரு தரப்பும் ஒருங்கிணைந்த முறையில் பணியாற்றும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இரு தரப்பிலும் நடந்த பல சுற்று பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட கருத்தொற்றுமையின் அடிப்படையில், இரு தரப்பும் முன்வரிசை துருப்புகள் ஒத்திசைக்கப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் திரும்பப்பெறுவது தொடங்கி நடந்து வருகிறது. இருதரப்பும் ஒட்டுமொத்த படை விலக்க நடவடிக்கையை கருத்தொற்றுமை மற்றும் ஒப்பந்தத்தின்படி தொடரும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இதற்கு கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா என்று கேட்கிறீர்கள். அது பற்றி எனக்கு தெரியாது. நீங்கள் ராணுவத்தைத்தான் கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News