லைஃப்ஸ்டைல்
நம்பிக்கை தோன்றும்போது வாழ்க்கை அழகாகும்..

நம்பிக்கை தோன்றும்போது வாழ்க்கை அழகாகும்..

Published On 2020-02-15 06:37 GMT   |   Update On 2020-02-15 06:37 GMT
வாழ்க்கையை பற்றி தீர்மானமான விளக்கம் எதுவும் இல்லாவிட்டாலும், வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு மனோபலம் என்ற ஒன்று மட்டுமே தீர்வாக அமைகிறது.
நாம் ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டே இருக்கிறோம். பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்கிறோம். நூறாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ வேண்டும் என்பதற்காக என்னென்னவெல்லாமோ செய்கிறோம். பணத்தை இறைத்து பல்வேறு விஷயங்களை அனுபவிக்கிறோம். அதெல்லாம் சரிதான். அத்தனைக்கும் மையமான வாழ்க்கை என்பது...

- உயிரோடு இருப்பதா?

- மகிழ்ச்சியாக இருப்பதா?

- பணம், புகழைத் தேடி தலை தெறிக்க ஓடுவதா?

- தோல்விகளில் கற்றுக் கொள்வதா?

- வெற்றிகளில் பெற்றுக் கொள்வதா?

- தன்னலமற்ற அர்ப்பணிப்பா?

- தத்துவங்களின் அணிவகுப்பா?

.... இவைகளில் எது வாழ்க்கை என்று உறுதியாக கூற முடியாவிட்டாலும், பிறந்தவர் அனைவரும் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

நிஜத்தை சொன்னால், வாழ்க்கை என்பது ஓர் அனுபவம். ஆளுக்கு ஆள் மாறுபடும். சுகமோ துக்கமோ அனுபவம் நம்மை பலப்படுத்துகிறது. சில நேரங்களில் காயப் படுத்துகிறது, திடீரென்று சிரிக்க வைக்கிறது, அழவைக்கிறது. முடிவில் இதில் எது வாழ்க்கை என்று சிந்திக்க வைக்கிறது. சிந்திக்கும் மனிதன் தெளிவடைந்தானா என்றால் அதுதான் இல்லை. மென்மேலும் குழம்பி சில நேரங்களில் தற்கொலையில் வாழ்வை பறிகொடுத்தும் விடுகிறான்.

மனிதனை தவிர இந்த உலகில் உள்ள வேறு எந்த ஜீவராசியும் வாழ்க்கையை பற்றி ஆராய்ச்சி செய்வதில்லை. விலங்குகள் தற்கொலை செய்து கொள்வதுமில்லை. காரணம் அவைகளுக்கு வாழ்க்கை முடிவை பற்றிய பயமில்லை. அந்த வகையில் அவைகளுக்கு அறியாமை ஒரு வரம்.

‘நான்தான் அறிவாளி!’ என்று கர்வப்படும் மனிதனால் வாழ்க்கையில் ஜெயிக்க முடிவதில்லை. காரணம் அறிவு மட்டும் வாழ்க்கைக்கு போதாது. அதற்கு மேலும் ஒன்று தேவைப்படுகிறது. அது என்ன..? தன்னம்பிக்கை. மனோபலம் உள்ளவனுக்கு மட்டுமே அது சாத்தியமாகும்.

அப்படி ஒரு விஷயம் இருக்கிறதா...? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.

வாழ்க்கையை பற்றி தீர்மானமான விளக்கம் எதுவும் இல்லாவிட்டாலும், வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு மனோபலம் என்ற ஒன்று மட்டுமே தீர்வாக அமைகிறது. அவரவர்களின் வாழ்க்கை அனுபவங்களே அவரவருக்கு வழிகாட்டி. அனுபவங்களிலிருந்து அவர்கள் புதிய பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி கற்றுக் கொண்டவர்கள் ஜெயிக்கிறார்கள். கற்றுக் கொள்ளாதவர்கள் தவிக்கிறார்கள்.

சிறந்ததாக மேற்கோள்காட்டப்படும் ஜெர்மனிய பழமொழி ஒன்று “அனுபவம் என்ற பள்ளியில் அறிவற்றவன் எதையும் கற்றுக் கொள்ளமாட்டான்” என்கிறது. ஆசிரியரிடம் நாம் முழுமையாக கற்றுக்கொள்ளாவிட்டாலும், அனுபவத்திடம் கட்டாயம் கற்றுக் கொள்ளவேண்டும். அப்படி கற்றுக் கொள்ளாதவரை வாழ்க்கை நமக்கு வசப்படாது.

இ்ந்த உலகில் மனிதர்களும் வாழ்கிறார்கள். மற்ற உயிரினங்களும் வாழ்கின்றன. ஆனால் மற்ற உயிரினங்களிலிருந்து மனிதன் பல விதங்களில் மாறுபடுகிறான். சூழ் நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வதில், தன் தேவைகளை தானே தேடி பூர்த்தி செய்து கொள்வதில், நன்மை- தீமைகளை பகுத்தறியும் விதத்தில், பிறருக்கு வழிகாட்டியாக இருப்பதில்..!

சிறப்பு குணங்களான இவைகளை எல்லாம் பெற்று, சிந்தித்து செயல்படும் திறன் பெற்றிருக்கும் மனிதன், சில நேரங்களில் மிருகத்தை விட கீழ்நிலைக்கு வந்து விடு கிறான். போகும் திசை தெரியாமல் மயங்கி நிற்கிறான். அப்போது தான் வாழ்க்கையில் பயம் ஏற்படுகிறது.

மனிதர்களை துன்பம் துரத்தும்போது அவர்கள் மனோபலத்தை பெருக்கிக்கொள்வதில்லை. தோல்விக்கு பின்பு கிடைக்கப்போகும் வெற்றிக்காக அவர்கள் காத்திருக்கவும் தயாரில்லை. தோல்வியே வாழ்க்கை என்று முடிவுசெய்து, தனக்கு சோகமான முடிவைதேடிக் கொள்கிறான். தோல்விகள் நமக்கு நல்ல அனுபவங்களை தந்து, நம்மை பலசாலியாக்குகிறது என்ற உண்மை பலருக்கும் புரிவதில்லை.

நம்பிக்கை எனும் வானவில் நம்மிடம் எப்போதும் இருக்கவேண்டும். வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது. நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது. ஒவ்வொரு மனிதனின் கையிலும் அழகான வாழ்க்கை இருக்கிறது. அதை வளப்படுத்தும் நம்பிக்கை எனும் வானவில்தான் தோன்ற மறுக்கிறது. அப்போது வாழ்க்கை வெறுமையாகிறது. அந்த வெறுமையை நிரப்ப யாராலும் முடியாது.

இரவும், பகலும் வருவதுமில்லை. போவதுமில்லை. அவை பூமி சுழலுவதால் ஏற்படும் மாற்றங்கள். சுகமும், துக்கமும் வருவதுமில்லை. போவதுமில்லை. நாம் வாழ்வதால் வரும் மாற்றங்கள். பூமி இரவுக்காக வருந்துவதுமில்லை, பகலுக்காக மகிழ்வதுமில்லை. அது ஓர் கர்மயோகியைப் போல தன் பணியை செய்துக் கொண்டிருக்கிறது.

சூரியன் உயிர்களை வளர்க்கிறது. காக்கிறது. அது இல்லாத நேரத்திலும் உயிர்கள் அதை எதிர்நோக்கி காத்திருக்கிறது. ஆனால் இன்றைய அவசர மனிதனிடம் விடியலுக்காக காத்திருக்கும் பொறுமையில்லை. கல்வியறிவு அதிகமில்லாத காலத்தில் கூட இருந்திராத மனச்சுமை, டென்ஷன், தற்கொலைகள், இப்போது தான் அதிகமாகி வருகிறது. எந்த அறிவியல் வளர்ச்சியும் இவர்களை வாழவைப்பதில்லை.

இந்த நவீனயுகத்தில் தற்கொலை தடுப்பு மையங்கள் ஆங்காங்கே உருவாகி வருவது வரமா? சாபமா?- ஆழமாக விவாதிக்கவேண்டிய விஷயம் இது!

உங்களுடைய வாழ்க்கையில் மற்றவர் களுக்கு தேவையான முன் உதாரணம் இருக்க வேண்டும். தோல்விகளை தாண்டி வெளிவந்தால் தான் அங்கே வெற்றி நம்மை வரவேற்க காத்திருக்கும். வெற்றிக்காக உழைக்கிறோம். தோல்வி நம் முன்வந்து நிற்கும் போது துவண்டு போகிறோம். தோல்வி தான் முதலில் வரும். அது உலக இயல்பு. தோல்வியை கண்டு மிரண்டு போய் வாழ்க்கையை தொலைத்து விடுகிறோம். ஏன் இந்த அவசரம். தோல்விக்கு பின் வெற்றி என்ற வாக்கு பொய்யா, மெய்யா என்று பொறுத் திருந்து பார்க்கலாமே.

நாம் நினைக்கும் எண்ணங்கள் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். அந்த பாசிடிவ் எண்ணங்கள் நம் சூழ் நிலைகளை மாற்றியமைத்து நம்மை வெற்றி பாதையில் அழைத்துச் செல்லும். நம் எண்ணம் ஒருநாள் செயலாகும் போதுதான் அந்த எண்ணத்தின் வலிமை புரியும். நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாக மாறிவிடுவோம்.

- யானை, குதிரை, போன்றவை நம்மைவிட உடலில் பலமடங்கு பலசாலிகளாக இருந்தாலும், அதனை அடக்கியாளும் சக்தி நம்மிடம் உள்ளது. அந்த சக்தியை உணர்ந்து, நாம் நம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர் கொள்ளவேண்டும்.
Tags:    

Similar News