இந்தியா
போராட்டத்தில் பங்கேற்ற சித்து

கெஜிரிவால் வீட்டின் முன் போராட்டம்- காங்கிரஸ் தலைவர் சித்து பங்கேற்றதால் பரபரப்பு

Published On 2021-12-05 11:35 GMT   |   Update On 2021-12-05 11:35 GMT
பஞ்சாப் அரசியலுக்குள் நுழையும் கெஜிரிவாலுக்கு எதிராக டெல்லியில் களம் இறங்கினார் நவஜோத்சிங் சித்து.
புதுடெல்லி:

புதுடெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் அருகே நடந்த போராட்டத்தில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவஜோத்சிங் சித்து இன்று பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுடெல்லியில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்கள் கெஜிரிவால் வீட்டின் அருகே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது அங்கு வந்த நவஜோத்சிங் சித்து, ஆசிரியர்களுடன் அமர்ந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

பின்னர் தமது ட்விட்டரில் இது குறித்து பதிவிட்ட சித்து, ‘ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையில் 8 லட்சம் புதிய வேலை வாய்ப்பு மற்றும் 20 புதிய கல்லூரிகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றாதது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினார். 

டெல்லியில் 1,031 பள்ளிகள் செயல்படும் நிலையில் 196 பள்ளிகளுக்கு மட்டுமே பிரின்சிபல் பதவிகள் நிரப்பப்பட்டுள்ளதாகவும்,  45 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் சித்து குறிப்பிட்டார்.

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் போட்டியிட புதுடெல்லி ஆளும் கட்சியான ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது.  இதற்கான பிரச்சாரங்களில் ஈடுபட  புதுடெல்லி முதலமைச்சரும் ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தயாராகி வருகிறார்.  

கடந்த மாதம் பஞ்சாப் மாநிலம் மோகாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், அடுத்த ஆண்டு நடைபெறும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆத் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் தலா ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என வாக்குறுதி அளித்திருந்தார்.

பஞ்சாப் மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு போட்டியாக ஆம் ஆத்மி இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதும் நிலையில் டெல்லியில் அவரது ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக உள்ள சித்து கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News