செய்திகள்
கொப்பரை தேங்காய்

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரத்து குறைவால் கொப்பரை தேங்காய் விலை அதிகரிப்பு

Published On 2020-12-02 15:20 GMT   |   Update On 2020-12-02 15:20 GMT
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரத்து குறைவு காரணமாக கொப்பரை தேங்காய் விலை அதிகரித்து காணப்பட்டது.
பொள்ளாச்சி:

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறுகிறது. அதன்படி நேற்று கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு ஆனைமலை சுற்று வட்டார விவசாயிகள் கொப்பரை தேங்காயை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். விற்பனை கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் ஏலத்தை நடத்தி வைத்தார்.

வியாபாரிகள் கலந்துகொண்டு போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். அதன்படி முதல் ரகம் கிலோவுக்கு ரூ.115.50 முதல் ரூ.130.10 வரையும், 2-வது ரகம் கிலோவுக்கு ரூ.75.50 முதல் ரூ.90.10 வரையும் ஏலம் போனது. வரத்து குறைவு காரணமாக கடந்த வாரத்தை விட கொப்பரை தேங்காய் விலை அதிகரித்து இருந்தது. இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனை அதிகாரிகள் கூறியதாவது:-

முதல் ரக கொப்பரை தேங்காய் 195 மூட்டையும், 2-ம் ரக கொப்பரை தேங்காய் 166 மூட்டையும் சேர்த்து மொத்தம் 361 மூட்டை கொப்பரை தேங்காய் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஆனைமலை சுற்று வட்டார பகுதி விவசாயிகள் மற்றும் உடுமலை, கேரள பகுதிகளில் இருந்து 69 விவசாயிகள் கொப்பரை தேங்காயை கொண்டு வந்திருந்தனர். ஆனைமலை, நெகமம், மூலனூர், காங்கயம், வெள்ளக்கோவில் மற்றும் கேரளாவில் இருந்து வியாபாரிகள் வந்து கொப்பரை தேங்காயை ஏலம் எடுத்தனர்.

தற்போது மழை பெய்து வருவதாலும் சீசன் இல்லாததால் தேங்காய் வரத்து குறைந்து உள்ளது. இதனால் உணவு தேவைக்கு மட்டும் தேங்காய் போதுமானதாக உள்ளது. இதனால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொப்பரை தேங்காய் வரத்து குறைந்து உள்ளது. இதன் காரணமாக கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ரூ.6.65 அதிகரித்து இருந்தது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News