ஆன்மிகம்
சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்த காட்சி.

நாமக்கல் கிறிஸ்து அரசர் தேவாலய பெருவிழா நிறைவு

Published On 2021-11-22 04:38 GMT   |   Update On 2021-11-22 04:38 GMT
நாமக்கல் கிறிஸ்து அரசர் தேவாலய பெருவிழாவின் இறுதி நாளான நேற்று சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
நாமக்கல்- திருச்சி சாலையில் கிறிஸ்து அரசர் தேவாலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கிறிஸ்து அரசர் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேவாலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் சேலம் மறைமாவட்ட பொருளாளர் ஜேக்கப் கிறிஸ்து அரசர் பெருவிழாவை கொடியேற்றி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து தினசரி நவநாள் திருப்பலி நடைபெற்று வந்தது. இறுதி நாளான நேற்று காலையில் சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அவரிடம் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. அவரும் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக தெரிவித்தார்.

இரவில் நாமக்கல் மறைவட்ட குருக்கள் அருள்சுந்தர் தலைமையில் திருவிழா திருப்பலியும், தேவாலய வளாகத்திற்குள் கிறிஸ்து அரசர் தேர்பவனியும் நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்குதந்தை ஜான் அல்போன்ஸ், பிரான்சீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.

Tags:    

Similar News