ஆன்மிகம்
கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு முருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹாரம்

கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு முருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹாரம்

Published On 2020-11-20 03:46 GMT   |   Update On 2020-11-20 03:46 GMT
கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு முருகன் கோவில்களில் இன்று (வெள்ளிக்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது.
நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. விழா நாட்களில் உள் திருவிழாவாக யாகசாலை பூஜை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.

கொரோனா ஊரடங்கை முன்னிட்டு கோவில் முன்பகுதியில் இந்த சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு அம்பாள் தபசு காட்சியும், சுவாமிக்கு காட்சி கொடுத்தல் வைபவமும் கோவில் உள்பகுதியில் நடத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நெல்லையப்பர் கோவிலில் கந்தசஷ்டி விழா உள் விழாவாக சிறப்பு வழிபாடுடன் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் ஆறுமுகர் சன்னதியில் சிறப்பு ஹோமம், அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தன. சூரசம்ஹாரம் இன்று மாலையில் ஆறுமுகர் சன்னதி முன்பு நடக்கிறது. இதேபோல் பாளையஞ்சாலைகுமாரசாமி கோவில், வண்ணார்பேட்டை குட்டத்துறை சுப்பிரமணியர் கோவில், பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் கோவில் சுப்பிரமணியர் சன்னதி, மேலவாசல் சுப்பிரமணியர் கோவில், குறிச்சி சொக்கநாதர் கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹாரம் நடக்கிறது.
Tags:    

Similar News