செய்திகள்
தங்க தகடுகள் பதிக்கப்பட்ட கழிவறை

தங்கத்தில் ஜொலிக்கும் கழிவறை -பின்னணியில் லஞ்சம் வாங்கியே கோடீஸ்வர் ஆன போலீஸ் அதிகாரி

Published On 2021-07-24 13:21 GMT   |   Update On 2021-07-24 13:21 GMT
கைது செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 8 ஆண்டு முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க வாய்ப்புள்ளது.
மாஸ்கோ:

ரஷியாவில் போக்குவரத்துக் காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவரின் ஆடம்பர மாளிகைக்குள் அதிரடி சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அங்கு கழிவறை மற்றும் சில பொருட்கள் தங்கத்தினால் ஆனவை என்று கண்டுபிடித்துள்ளனர். போக்குவரத்து காவல்துறை அதிகாரி கர்னல் அலெக்ஸி சபோனோவ் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் மேலும் 6 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமதி பெறாத சரக்குகளை சோதனைச் சாவடிகள் வழியாக கொண்டு செல்வதற்கு ஓட்டுநர்களிடம் போக்குவரத்து காவலர்கள் சிலர் லஞ்சம் பெற்றதாக  வந்தப் புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக இவர்கள் கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் 1.9 கோடி ரூபாயை லஞ்சமாக பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
 
சோதனை நடந்த அதிகாரியின் மாளிகைக்குள் படிக்கட்டுகள், அலமாரிகள், திரைச்சீலைகள் மற்றும் அலங்காரப் பொருட்களில் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டிருப்பதை லஞ்ச ஒழிப்பு துறையினர் வீடியோவாக எடுத்துள்ளனர். அது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கைது செய்யப்பட்ட அதிகாரி இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 8 ஆண்டு முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க வாய்ப்புள்ளது.

ஐக்கிய ரஷியா கட்சியின் எம்பி அலெக்சாண்டர் டெலிகிராமில் இதுபற்றி கூறுகையில், ‘இதைப் போன்று 35 போக்குவரத்து  காவலர்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு பின்னால் மிகப்பெரிய மாஃபியா கும்பல் செயல்பட்டு வருகிறது. கருப்பு சந்தையில் இது போன்று சரக்குகளை விற்பனை செய்து லாபம் ஈட்டி வருகிறது’ என்றார்.
Tags:    

Similar News