செய்திகள்
உட்கோட்டை வடக்கு புதுத்தெருவில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்ற காட்சி.

ஜெயங்கொண்டம் அருகே திடீர் மழை: வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

Published On 2021-07-18 09:39 GMT   |   Update On 2021-07-18 09:39 GMT
ஜெயங்கொண்டம் அருகே திடீரென பெய்த மழையை தொடர்ந்து, வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை வானில் கருமேகங்கள் திரண்டன. இதைத் தொடர்ந்து திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இதில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமப்பகுதியில் சுமார் அரை மணி நேரமாக மழை கொட்டித்தீர்த்தது.

தெருக்களில் சரியான முறையில் வடிகால் வசதி இல்லாததால், வெளியேற வழியின்றி கணுக்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியது. மேலும் அப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகினர்.

அப்பகுதியில் மழைக்காலங்களில் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீர் தேங்கும் நிலை உள்ளதாகவும், இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை சரியான முறையில் நடவடிக்கை இல்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இனிவரும் காலங்களில் அதிகப்படியான மழைப்பொழிவு இருக்கும் என்பதால் தண்ணீர் தேங்கி வீடுகளில் உள்ள சுவர்கள் இடிந்து விழும் அபாய நிலை உள்ளதாகவும், இதனால் வீடுகளில் குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் அவதிப்படும் நிலை உள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே இப்பகுதியில் உள்ள தெருக்களில் தண்ணீர் வெளியேறுவதற்கான வடிகால் வசதியை உடனடியாக ஏற்படுத்தித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News