செய்திகள்

குவைத் விமானத்தில் திடீர் எந்திரகோளாறு- 164 பயணிகள் தப்பினர்

Published On 2018-05-14 01:57 GMT   |   Update On 2018-05-14 01:57 GMT
சென்னை விமானநிலையத்தில் குவைத்திற்கு செல்ல இருந்த விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டது. விமானம் புறப்படுவதற்கு முன்பாக கோளாறு தெரியவந்ததால், 164 பயணிகள் உயிர்தப்பினர்.#ChennaiAirport
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு குவைத்திற்கு விமானம் செல்ல இருந்தது. இதில் பயணம் செய்ய 164 பயணிகள் சோதனைகளை முடித்துக்கொண்டு விமானத்தில் ஏறினார்கள். விமானம் நடைமேடையில் இருந்து ஓடுபாதைக்கு செல்ல முயன்றபோது விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார்.

இதனையடுத்து விமானம் ஓடுபாதைக்கு செல்லாமல் நடைமேடையில் நிறுத்தப்பட்டு விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது. விமான நிறுவன தொழில்நுட்ப பொறியாளர்கள் குழுவினர் வந்து எந்திர கோளாறை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் உடனடியாக எந்திர கோளாறை சரி செய்ய முடியாததால் விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.

அனைவரும் சென்னையில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்தபின்னர் விமானம் குவைத்திற்கு புறப்பட்டு செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



உரிய நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட எந்திர கோளாறை விமானி கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணிகள் அனை வரும் உயிர்தப்பினர். #ChennaiAirport
Tags:    

Similar News