செய்திகள்
பணம் மோசடி

ரூ.80 லட்சம் மோசடி செய்தவரை காரில் கடத்திய கும்பல்- எழும்பூரில் பரபரப்பு

Published On 2021-07-08 09:11 GMT   |   Update On 2021-07-08 09:11 GMT
ராஜா மற்றும் அவரை கடத்தியவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 6 பேரையும் கைது செய்தனர்.
சென்னை:

சென்னை வடபழனி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் எழும்பூர் கென்னத் லேன் சாலையில் உள்ள லாட்ஜ் ஒன்றுக்கு சிலரை பார்க்க சென்றார்.

அப்போது அங்கு தங்கியிருந்த 6 பேர் திடீரென அவரை குண்டுகட்டாக காரில் தூக்கி போட்டுக்கொண்டு கடத்தி சென்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜாவின் டிரைவர், காரை விரட்டி சென்றார். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் அந்த கார் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்றுவிட்டது.

இதுபற்றி அவர் உடனடியாக எழும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

எழும்பூர் போலீசார் உடனடியாக ராஜாவின் செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. சில மணி நேரங்கள் கழித்து போலீசார் கடத்தப்பட்ட ராஜாவிடம் போனில் பேசினர்.

அப்போது அவர் தன்னை கடத்தியவர்கள் யார் என்பது பற்றி தெரிவித்தார். உடனடியாக அவர்களின் பின்னணி பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

கடத்தப்பட்ட ராஜா மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கடலூர், விழுப்புரம், பண்ருட்டி, சிதம்பரம், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களிடம் ரூ.80 லட்சம் வரையில் பணம் வாங்கி மோசடி செய்து இருப்பது தெரிய வந்தது.

இந்த பண விவகாரம் காரணமாகவே ராஜா கடத்தப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த நிலையில் தொலைபேசியில் ராஜாவிடம் போலீசார் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தனர். அப்போது அவர் காவல் நிலையத்திற்கு நானே நேரில் வருகிறேன் என்று தெரிவித்தார்.

இதன்படி கடத்தப்பட்ட ராஜா போலீஸ் நிலையத்துக்கு நேரில் வந்தார். அப்போது அவரை கடத்தி சென்றவர்களும் உடன் வந்தனர்.

இதனை தொடர்ந்து ராஜா மற்றும் அவரை கடத்தியவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 6 பேரையும் கைது செய்தனர். விருத்தாச்சலம் வேட்டக்குடியைச் சேர்ந்த குமார், விழுப்புரம் மலவந்தாங்கலை சேர்ந்த அலெக்ஸ், பண்ருட்டியை சேர்ந்த கிள்ளிவளவன், கடலூர் திருநகரை சேர்ந்த சுதர்சன், சிதம்பரம் சிவஜோதி நகரை சேர்ந்த சிவபாலன், திருவண்ணாமலை வேட்டவலத்தை சேர்ந்த ராமமூர்த்தி ஆகிய 6 பேரும் கைதானார்கள்.

இவர்கள் மீது கடத்தல், தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து எழும்பூர் போலீசார் 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

எழும்பூர் கென்னத்லேன் பகுதி அருகில்தான் பழைய கமி‌ஷனர் அலுவலகம் உள்ளது. அங்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகம் தற்போது செயல்பட்டு வருகிறது.

எப்போதும் பரபரப்பாக கென்னத்லேன் பகுதி காணப்படும். அந்த பகுதியில் வைத்து மோசடி விவகாரத்தில் 6 பேர் கொண்ட கும்பல் மோசடி ஆசாமியை காரில் கடத்தி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் பின்னணியில் வேறு யாரும் உள்ளார்களா என்பது பற்றியும் எழும்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

Similar News