செய்திகள்
உலக சுகாதார அமைப்பு

2050-ம் ஆண்டுக்குள் உலகளவில் நான்கில் ஒருவருக்கு செவிதிறன் பிரச்சனை ஏற்படும்: உலக சுகாதார அமைப்பு தகவல்

Published On 2021-03-02 07:33 GMT   |   Update On 2021-03-02 11:44 GMT
2050-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் செவி திறன் பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
ஜெனீவா:

உலகளவில் செவி திறன் பிரச்சனையால் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பல்வேறு பாதிப்புகள் காரணமாக காது கேட்கும் திறன் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உலகம் முழுவதும் ஐந்தில் ஒருவர் செவி திறன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் 2050-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் செவி திறன் பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் 2050-ம் அண்டுக்குள் செவி திறன் பிரச்சனையால் பாதிக்கப்படுவார்.

ஏனென்றால் இந்த பிரச்சனை சரியாக கவனிக்கப்படவில்லை. அடுத்த மூன்று தசாப்தங்களில் செவித்திறன் குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கை 1½ மடங்குக்கும் மேலாக அதிகரிக்கக் கூடும். 2.5 பில்லியன் மக்கள் பாதிக்கப்படக்கூடும். இது 2019-ம் ஆண்டில் 1.6 பில்லியனாக இருந்தது.

2.5 பில்லியன் மக்களில் 700 மில்லியன் பேர் 2050-ம் ஆண்டுக்குள் சிகிச்சைகள் தேவைப்படும் அளவுக்கு தீவிரமான நிலையை எட்டக்கூடும். இந்த சிகிச்சை அளவு 2019-ம் ஆண்டில் 430 மில்லியனாக இருந்தது.

செவிதிறன் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக அதை தீர்ப்பதற்கான கவனிப்பு அணுகல் பற்றாக்குறை ஆகும். குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் சிகிச்சை அளிக்க குறைந்த வல்லுனர்களே உள்ளனர்.

இதுபோன்ற நாடுகளில் காது கேளாமை உள்ளவர்களில் கிட்டத்தட்ட 80 சதவீதம் பேர் வசிக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கவில்லை. பணக்கார நாடுகளில் கூட, செவித்திறன் பிரச்சனையில் சிகிச்சை சீரற்றதாக இருக்கிறது.

இப்பிரச்சனை சரியாக கவனிக்கப்படாததால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் இழக்கப்படுகிறது. பொது இடங்களில் சத்தத்தை குறைப்பதில் இருந்து காது கேளாமை மற்றும் மூளைக் காய்ச்சல் போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகளை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News