செய்திகள்
கோப்புப்படம்

ரூ.2¼ கோடி செம்மர கடத்தலில் அதிகாரிகளுக்கு தொடர்பு?

Published On 2021-09-08 10:28 GMT   |   Update On 2021-09-08 10:28 GMT
சிப்காட் பகுதியில் செயல்படும் கன்டெய்னர் முனையத்தில் இருந்து செம்மரக் கட்டைகள் கடத்தப்படுவதாக தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தூத்துக்குடி:

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கன்டெய்னர் மூலமாக ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் சுங்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் தான் சீல் வைக்கப்பட்டு லாரிகளில் துறைமுகத்திற்கு அனுப்பப்படும்.

இதற்காக தூத்துக்குடியில் சுங்கத்துறை அங்கீகாரம் பெற்ற 15-க்கும் மேற்பட்ட கன்டெய்னர் முனையங்கள் உள்ளன.

இந்நிலையில் சிப்காட் பகுதியில் செயல்படும் கன்டெய்னர் முனையத்தில் இருந்து செம்மரக் கட்டைகள் கடத்தப்படுவதாக தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அதிகாரிகள் கன்டெய்னர் முனையத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

அங்கிருந்த 2 கன்டெய்னர்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2¼ கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மொத்த எடை 5.69 மெட்ரிக் டன் ஆகும். இதையடுத்து செம்மரக்கட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, கன்டெய்னரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தூத்துக்குடி வி.எம்.எஸ். நகரை சேர்ந்த ஒருவரை அதிகாரிகள் கைது செய்து மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் செம்மரக்கட்டைகள் அனைத்தும் ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்டுள்ளதும், இங்கிருந்து துபாய் துறைமுகமான ஜபல் அலிக்கு கடத்த இருந்ததும் தெரிய வந்தது.

அதிகாரிகள் இல்லாமல் கன்டெய்னர்களில் உள்ள பொருட்களை சீல் வைக்க முடியாது என்பதால் இந்த சம்பவத்தில் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம். வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற கோணத்திலும் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு போதை பொருள்கள், செம்மரங்கள் உள்ளிட்டவை கடத்தல் அதிகரித்தது. வெளிநாட்டில் இருந்து தனிநபர் ஒருவர் அனுப்பிய சோப்பு கட்டிகளுக்குள் கடத்தி வரப்பட்ட 24 கிலோ தங்கம் பிடிபட்டது.

இதனைத்தொடர்ந்து இதுபோன்ற தனிநபர் பேக்கேஜ்களுக்கு அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது சுய லாபத்திற்காக இதுபோல் பேக்கேஜ் முறை மீண்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News