செய்திகள்
போக்குவரத்து போலீசாருடன் கவர்னர் கிரண்பேடி செல்பி எடுத்துக்கொண்ட காட்சி.

போலீசார் செல்போனில் பேசுவதை தவிர்க்க வேண்டும்- கவர்னர் கிரண்பேடி அறிவுரை

Published On 2019-12-07 06:04 GMT   |   Update On 2019-12-07 06:04 GMT
போக்குவரத்து சீரமைப்பில் ஈடுபடும் போலீசார் செல்போனில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று புதுவை கவர்னர் கிரண்பேடி அறிவுரை வழங்கியுள்ளார்.
புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண்பேடி வார இறுதி நாட்களில் தூய்மை பணி மற்றும் நீர்நிலைகளை ஆய்வு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

தற்போது கவர்னர் கிரண்பேடி போலீஸ் நிலையத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வில்லியனூர், கோரி மேடு மற்றும் திருபுவனை போலீஸ் நிலையங்களில் ஆய்வு செய்தார்.

அப்போது போலீஸ் நிலையங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், பெண் போலீசாரும் ரோந்து செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் இன்று காலை கவர்னர் கிரண்பேடி நேரு வீதி- செஞ்சி சாலை சந்திப்பில் உள்ள போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார்.

தினமும் எத்தனை விபத்து வழக்கு பதிவு செய்யப்படுகிறது என்பது குறித்தும், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களில் எத்தனை பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து போக்குவரத்து போலீசாரும் ரோந்து செல்ல வேண்டும் என்றும், ரோந்து பணியின் போது எங்கு போக்குவரத்துக்கு இடையூறாக குறைகள் உள்ளதோ அதனை குறிப்பெடுத்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும் பணியில் இருக்கும் போக்குவரத்து போலீசார் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக சிக்னல்கள் மற்றும் போக்குவரத்து சீரமைப்பில் ஈடுபடும் போக்குவரத்து போலீசார் இதனை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று கூறினார். அதே வேளையில் அவசர தேவைக்கு செல்போன் பயன்படுத்துவதில் தவறு இல்லை என்றார்.

இதனைத்தொடர்ந்து தன்னுடன் செல்பி எடுத்துக் கொள்ளுமாறு போக்குவரத்து போலீசாரிடம் கேட்டுக்கொண்டார். அதன்படி போக்குவரத்து போலீசார் கவர்னருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அகஷ்யா யாதவ், போலீஸ் சூப்பிரண்டுகள் ரக்சனாசிங், மாறன், முருகவேல், இன்ஸ்பெக்டர்கள் முருகையன், செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News