ஆன்மிகம்
கொல்லூர் மூகாம்பிகை திருத்தலம்

கொல்லூர் மூகாம்பிகை திருத்தலம்

Published On 2020-08-15 02:21 GMT   |   Update On 2020-08-15 02:21 GMT
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ளது கொல்லூர் திருத்தலம். இங்கு பிரசித்திபெற்ற மூகாம்பிகை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த தேவியைப் பற்றிய சிறிய தகவல்களை இங்கே பார்ப்போம்..
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ளது கொல்லூர் திருத்தலம். இங்கு பிரசித்திபெற்ற மூகாம்பிகை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள அன்னை மூகாம்பிகை, கலைகளுக்கு அதிதேவதையாக கருதப்படுகிறாள். இந்த தேவியைப் பற்றிய சிறிய தகவல்களை இங்கே பார்ப்போம்..

* மூகாம்பிகை கலைகளுக்கு அதிதேவதையாக இருப்பதால், கலைத்துறையின் பல்வேறு பிரிவைச் சேர்ந்த கலைஞர்களும், தங்கள் திறமையில் சிறப்படைய கொல்லூர் மூகாம்பிகையை வணங்கி வரலாம். இந்த ஆலயத்தில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் கலைஞர்கள் தங்கள் படைப்புகளை படைத்து அம்மனுக்கு கலாஞ்சலி செய்கிறார்கள்.

* இந்த அன்னைக்கு தினமும் மூன்று விதமாக அலங்காரம் செய்யப்படுகிறது. அதன்படி காலையில் காளிதேவியின் அம்சமாகவும், உச்சிப் பொழுதில் திருமகளான லட்சுமிதேவியின் அம்சமாகவும், இரவில் கலைமகள் சரஸ்வதிதேவியின் அம்சமாகவும் பாவிக்கப்படுகிறாள்.

* பொதுவாக அனைத்துக் கோவில்களிலும் உள்ள மூலவர் விக்கிரகங்கள், கற்சிலையாகத்தான் இருக்கும். ஆனால் மூகாம்பிகை அம்மனின் ஆலயத்தில் மட்டும் மூல விக்கிரகம் பஞ்சலோகத்தால் ஆனது. ஆதி சங்கரர் தன் மனக்கண்ணில் தோன்றிய அம்மன் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் கோலத்தைப் பற்றி சிற்பிகளிடம் சொல்லி, அதன்படி ஒரு பஞ்சலோக சிலையை வடிக்கச் சொன்னார். அந்த ஐம்பொன் விக்கிரகமே இன்றும் ஆலயத்தில் அலங்கார தேவதையாக உள்ளது.

* அம்பாளுக்கு துளசி மற்றும் பிச்சிப்பூவால் ஆன மாலையை அணிவிக்கிறார்கள். தமிழகத்தில் தேன்பூ என்று வழங்கப்படும் சிகப்பு நிறத்தில் கொத்து கொத்தாக உள்ள இந்த காட்டு மலர்களினால் ஆன ஆரத்தை விசேஷமானது என்று அணிவிக்கிறார்கள்.

* இந்த ஆலயத்தில் செய்யப்படும் அபிஷேக ஆராதனைகள் அனைத்தும் சுயம்புவாக உள்ள லிங்கத்திற்கே பிரதானமாக செய்யப்படுகிறது. அந்த அபிஷேக நேரத்தில், சிவலிங்கத்தின் மீது கீற்று போல காணப்படும் ரேகையை நாம் தரிசிக்க முடியும். மற்ற நேரங்களில் தங்கக் கவசம் கொண்டு லிங்கம் மூடப்பட்டிருக்கும்.

* அம்மனைத் தரிசிக்க வருபவர்கள், இயன்றவரை ஒரு நாளாவது முழுமையாக தங்கி ஆலயத்திலேயே அதிக நேரம் இருந்து வரிசையில் பலமுறை நின்று நித்திய பூஜைகள் அனைத்தையும் கண்குளிரக் கண்டு மூகாம்பிகையின் அருளைப் பெறுதல் வேண்டும்.

* ஏவல், பில்லி, சூன்யம், துஷ்ட தேவதைகளால் வரும் துன்பங்கள், சாபத்தால் தோன்றும் கோளாறு, தடை அனைத்தையும் தவிடு பொடியாக்கும் சர்வ வல்லமை படைத்தவள், இத்தல மூகாம்பிகை. இந்த அன்னைக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அலங்காரம் செய்யப்படுகிறது.

* மூகாம்பிகையின் பாதங்களில் அர்ச்சனை செய்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொள்வதால், நான்முகன் நம் தலையில் எழுதிய கெட்ட எழுத்தும் குங்கும மகிமையால் அழிந்து விடும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

* கொல்லூரில் புனித தீர்த்தமாக உள்ள சவுபர்ணிகா நதியில், 62 வகை மூலிகைகள் கலந்து வருவதாக சொல்கிறார்கள். எனவே அந்த நதியில் நீராடினால் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சிப்பெறும்.

* மூகாம்பிகை ஆலயத்துக்கு, ‘அறிவுக்கோவில்’ என்ற பெயரும் உண்டு. சிவராத்திரி தினத்தன்று இரவு முழுவதும் மூகாம்பிகை ஆலயம் திறந்திருக்கும். லிங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
Tags:    

Similar News