ஆன்மிகம்
குருவாயூரப்பன் கோவில்

மிகவும் புகழ்பெற்ற குருவாயூரப்பன் கோவில்- கேரளா

Published On 2021-02-19 05:04 GMT   |   Update On 2021-02-19 05:04 GMT
கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது, குருவாயூர் திருத்தலம். இங்குள்ள குருவாயூரப்பன் கோவில் மிகவும் புகழ்பெற்ற திருக்கோவிலாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது, குருவாயூர் திருத்தலம். இங்குள்ள குருவாயூரப்பன் கோவில் மிகவும் புகழ்பெற்ற திருக்கோவிலாகும். இந்த ஆலயத்தை ‘பூலோக வைகுண்டம்’ என்றும் அழைப்பார்கள். இந்தக் கோவிலில் உள்ள மூலவரான குருவாயூரப்பனின் விக்கிரகம் தனிச் சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில் இந்த விக்கிரகம், மிகவும் புனிதத்துவம் பெற்றதான ‘பாதாள அஞ்சனம்’ என்னும் கல்லில் வடிக்கப்பட்டது என்கிறார்கள்.

குருவாயூரப்பன் கோவிலில் உள்ள மூலவர் விக்கிரகத்தை, வைகுண்டத்தில் உள்ள மகாவிஷ்ணு உருவாக்கினார். பின்னர் அதனை பிரம்மதேவனிடம் ஒப்படைத்தார். அதை வைத்து சில காலம் பூஜை செய்து வந்த பிரம்மன், அந்த விக்கிரகத்தை தேவர்களின் குருவான பிரஜாபதியிடம் வழங்கினார். அவரிடம் இருந்த அந்த விக்கிரகம், கிருஷ்ணரின் தந்தையான வசுதேவரிடம் போய் சேர்ந்தது. அதன் மூலம், அந்த விக்கிரகம் மீண்டும் மகாவிஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணரிடமே வந்தடைந்தது. அதனை தான் ஆட்சி செய்த துவாரகையில் வைத்து வணங்கி வந்தார், கிருஷ்ணர்.

கிருஷ்ண அவதாரம் பூர்த்தியாகும் தருணம் வந்தபோது, தன் சிறுவயது முதலே தன்னுடன் இருந்தவரும், தன் தேரோட்டியுமான உத்தவரை அழைத்தார், கிருஷ்ணர். அவரிடம், “இன்னும் சில நாட்களில் துவாரகையை கடல் சூழ்ந்துகொள்ளப் போகிறது. அந்த பெருவெள்ளத்தில், நான் வழிபடும் விக்கிரகம் மிதக்கும். அதனை தேவர்களின் குருவான, பிரஜாபதியின் உதவியுடன் பக்தர்கள் வணங்கத்தக்க புனிதமான ஒரு இடத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும்” என்று கூறினார்.

கிருஷ்ணர் சொன்னபடியே, அடுத்த சில நாட்களில், பெரிய பிரளயம் ஒன்று உண்டானது. அந்த பிரளயத்தில் துவாரகை நகரம் தாக்கப்பட்டது. அந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட விக்கிரகம், குரு பகவானிடம் போய் சேர்ந்தது. அதை தன்வசப்படுத்திய குருபகவான், அவரது முதன்மை சீடரான வாயு தேவனுடன் சேர்ந்து விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டிய சிறப்பான ஒரு இடத்தைத் தேடி அலைந்தார். இறுதியில் அவர்கள் பரசுராமரால் உருவாக்கப்பட்ட, அந்த பசுமை போர்த்திய தேசத்தை அடைந்தார்கள். அதுவே கேரளம்.

அங்கே மகாவிஷ்ணுவின் மற்றொரு அம்சமாக கருதப்படும் பரசுராமரை, குரு பகவானும், வாயு பகவானும் சந்தித்தனர். பின்னர் அவரிடம், தங்களிடம் இருக்கும் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்வதற்கான இடத்தை காண்பித்தருளும்படி வேண்டினர். அதைக் கேட்டு பரவசம் அடைந்த பரசுராமர், ‘அந்த விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்வதற்கான சிறப்புமிக்க இடம் இதுதான்’ என்று, இருவரையும் அழைத்துப் போய் ஒரு இடத்தைக் காண்பித்தார். பன்னெடுங்காலமாக அந்த இடத்தின் அருகில்தான் சிவபெருமான், தவம் இருந்து வந்தார் என்பதை அதன் பிறகே குரு பகவானும், வாயு பகவானும் அறிந்து கொண்டனர்.

பரசுராமர் கை காட்டிய இடத்தில், விக்கிரகத்தை குருவும், வாயுவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்தனர். அவர்கள் இருவரும் சேர்ந்து இந்த காரியத்தைச் செய்ததால், இந்த தலம் ‘குருவாயூர்’ என்று ஆனது. இத்தல இறைவனும் ‘குருவாயூரப்பன்’ ஆனார். கிருஷ்ண பகவானால், துவாரகையில் வைத்து பூஜிக்கப்பட்ட விக்கிரகம் என்பதால், இந்த ஆலயம் ‘தென் துவாரகை’ என்றும் போற்றப்படுகிறது.
Tags:    

Similar News