செய்திகள்
பிரியங்கா காந்தி

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் முதலிடம் வகிப்பது வெட்கக்கேடு - உ.பி. அரசு மீது பிரியங்கா தாக்கு

Published On 2019-10-22 12:27 GMT   |   Update On 2019-10-22 12:27 GMT
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தர பிரதேசம் முதலிடம் வகிப்பது வெட்கக் கேடானது என காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
லக்னோ:

மத்திய குற்றப் பதிவேடு ஆவண காப்பகம் (என்சிஆர்பி) கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள்கள் கடத்தல், குழந்தைகள் கடத்தல் உள்பட பல்வேறு குற்றச் சம்பவங்கள் குறித்த தேசிய அளவிலான புள்ளிவிவரங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறது.

குற்றங்களின் வகைகள், அவை தொடர்பாக பதிவான வழக்குகள், வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள், நிலுவையில் உள்ள வழக்குகள் என பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு, இந்த விவரங்களை என்சிஆர்பி வெளியிட்டு வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு நிகழ்ந்த குற்றச் சம்பவங்கள் குறித்த புள்ளிவிவரங்களை என்சிஆர்பி வெளியிட்டது. 

இதற்கிடையே, 3 ஆண்டுக்கு பிறகு தற்போது என்.சி.ஆர்.பி ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் 10.1 சதவீதத்துடன் உத்தர பிரதேச மாநிலம் முதலிடம் வகிக்கிறது. அதற்கு அடுத்தபடியாக 9.4, 8.8, 7.7 சதவீதங்களுடன் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. 5.8 சதவீதத்துடன் குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு ஆறாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தர பிரதேசம் முதலிடம் வகிப்பது வெட்கக் கேடானது என காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று ரேபரேலி வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் நாட்டிலேயே உத்தர பிரதேசம் முதலிடத்தில் இருப்பது வெட்கக் கேடானது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைக்க முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News