செய்திகள்
பிரதமர் பிரயுத் சான் ஓச்சா

தாய்லாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

Published On 2021-02-20 19:11 GMT   |   Update On 2021-02-20 19:11 GMT
தாய்லாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்தது.
பாங்காக்:

தாய்லாந்தில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வருபவர் பிரயுத் சான் ஓச்சா. இவரது அரசுக்கு எதிராக கடந்த சில மாதங்களாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.‌ மாணவர் அமைப்புகள் நடத்தி வரும் இந்த தொடர் போராட்டம் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளது.

இதற்கிடையில் தாய்லாந்தின் முக்கிய எதிர்க்கட்சிகள் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா கொரோனாவை முறையாகக் கையாளவில்லை, நாட்டில் பொருளாதாரச் சரிவை ஏற்படுத்தினார், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதோடு, ஊழலையும் வளர்த்தார் என பல குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரது அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தன.

நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 487 உறுப்பினர்களில் 277 உறுப்பினர்கள் ஆளும் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் ஆவர். மீதமுள்ள 210 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியினர் ஆவர். நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு 244 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

இந்தநிலையில் தாய்லாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது நேற்று ஓட்டெடுப்பு நடந்தது. இதில் 272 பேர் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர். 206 பேர் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலம் பிரயுத் சான் ஓச்சா மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்தது. அவரது பிரதமர் பதவி தப்பியது.

முன்னதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமும் இதே போல் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதும், அதில் அவரது அரசு தப்பியதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News