செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியா? - புரியாத புதிராக இருக்கும் கமல்ஹாசன்

Published On 2019-03-01 03:00 GMT   |   Update On 2019-03-01 03:00 GMT
பாராளுமன்ற தேர்தலில் புரியாத புதிராக கமல்ஹாசன் இருந்து வருகிறார். மக்கள் நீதி மய்யத்துக்கு முதல் அக்னி பரீட்சை இது என்பதால், எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #KamalHaasan #ParliamentElection
சென்னை:

தமிழக அரசியலும், சினிமாவும் எப்போதுமே பிரிக்க முடியாத வகையில், ஒன்றோடு ஒன்று கலந்துதான் இருந்து வந்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி முடிந்த பிறகு, நடைபெற்று வரும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா என்று முதல்-அமைச்சராக இருந்தவர்கள் சினிமாத் துறையில் இருந்து வந்தவர்கள் தான்.

அதனால் தான், தற்போது அரசியல் பிரவேசம் எடுத்துள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் மீதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்து ஆண்டுகள் சில கடந்த பின்னும், இன்னும் அவர் கட்சியை தொடங்கவில்லை. ஆனால், அவருக்கு பிறகு மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன், சமீபத்தில் ஓராண்டை நிறைவு செய்து 2-வது ஆண்டிலும் அடியெடுத்து வைத்துவிட்டார்.



நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் மக்கள் நீதி மய்யத்துக்கு முதல் அக்னி பரீட்சை ஆகும். இந்தத் தேர்தலில் தனித்து போட்டியா?, கூட்டணி அமைத்து போட்டியா? என்பதை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்னும் தெளிவாக அறிவிக்கவில்லை. சமீபத்தில் நெல்லையில் நடந்த கட்சியின் 2-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “நான் தேர்தலில் தனியாக நிற்பதாக கூறுவது மூடத்தனமானது. மக்களோடு நிற்கிறேன். நான் யாரிடமும் சென்று ‘சீட்’ கேட்கவில்லை. நின்று அடிப்பவனுக்கு ‘சீட்’ எதற்கு. என்னை பார்த்து பா.ஜ.க.வின் ‘பி டீம்’ (அதாவது 2-வது அணி) என்கிறார்கள். இதுபோன்று கெட்ட வார்த்தை பேசினால் சரியான பதிலடி கொடுப்பேன். நாங்கள் யாருக்கும் ‘பி டீம்’ கிடையாது. தமிழகத்தின் உண்மையான ‘ஏ டீம்” என்று புரியாத புதிராக கருத்து தெரிவித்திருந்தார்.

நேற்று முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்களை தொண்டர்களிடம் இருந்து மக்கள் நீதி மய்யம் வாங்கத் தொடங்கியுள்ளது. பொதுவாக, அரசியல் கட்சிகளின் தலைமை அலுவலகத்தில் மட்டும் தான் தேர்தல் சமயங்களில் இதுபோன்று விருப்ப மனுக்கள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை, பொள்ளாச்சி அலுவலகங்களில் விருப்ப மனுக்கள் வழங்கப்படுகின்றன. மேலும், கட்சியில் அல்லாதவர்களும் விருப்ப மனுக்களை வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் தரப்பில் விசாரித்தபோது, “எங்கள் கட்சியை பொறுத்தவரை சட்டமன்ற தேர்தலே இலக்கு என்றாலும், பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு மெச்சத் தகுந்த அளவில் வாக்கு சதவீதத்தை பெறுவோம். கூட்டணி அமைத்தே இந்த தேர்தலை சந்திக்க உள்ளோம். கூட்டணி குறித்து ஆச்சரியமான தகவல் விரைவில் வெளியாகும்” என்று தெரிவிக்கப்பட்டது.

வழக்கமான தமிழக அரசியலில் இருந்து வேறுபட்டு நிற்க கமல்ஹாசன் விரும்புகிறார். டெல்லியில் எப்படி காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு மாற்றாக ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்ததோ, அதேபோன்ற நிலையை தமிழகத்திலும் ஏற்படுத்த அவர் நினைக்கிறார். அடிக்கடி அவர் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சென்று சந்தித்து வருவது அதை உறுதி செய்வதாக இருக்கிறது. #KamalHaasan #ParliamentElection
Tags:    

Similar News