செய்திகள்
கமல்ஹாசன்

தமிழ் வளர்ச்சிக்கு தனி அமைச்சகம்- கமல்ஹாசன் கோரிக்கை

Published On 2021-07-20 08:47 GMT   |   Update On 2021-07-20 08:56 GMT
ஒரு வழக்கில் தமிழ்மொழி வளர்ச்சிக்கென தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என உயர்நீதி மன்றமே கண்டித்தது நினைவிருக்கலாம்.

சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடுமையான முயற்சிகளுக்குப் பின் 2004-ம் ஆண்டு செம்மொழி எனும் அங்கீகாரத்தைப் பெற்றது தமிழ் மொழி. பரிதிமாற்கலைஞர் போன்ற தமிழ் அறிஞர்கள் தொடங்கிய இந்தப் போராட்டத்தில் இறுதி வெற்றியை ஈட்டித்தந்தவர் மு.கருணாநிதி. செம்மொழியான தருணத்தை அனைவருமே கொண்டாடி மகிழ்ந்தோம்.

செம்மொழி அறிவிப்பு வந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. மொழி வளர்ச்சிக்கென நாம் என்னவெல்லாம் செய்திருக்கிறோம் என கறாராகத் தொகுத்துப் பார்த்தால், பெரிதாக ஒன்றும் இல்லை.

ஒரு வழக்கில் தமிழ்மொழி வளர்ச்சிக்கென தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என உயர்நீதி மன்றமே கண்டித்தது நினைவிருக்கலாம்.

உலகமொழிகளைப் பார்ப்பானேன், இந்தியைப் பரப்பவும் கற்றுக் கொடுக்கவும் இந்தி பிரசார சபா மிகத் தீவிரமாக இயங்கிவருகிறது. ஆனால், தமிழை முறையாகக் கற்று அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் பெற இன்னமும் ஓர் அமைப்பு இங்கே ஏற்படுத்தப்படவில்லை. உலகின் எந்த மூலையில் வசிக்கும் எந்த நாட்டைச் சேர்ந்தவரும் தமிழைக் கற்றுக் கொள்ள நெறிப்படுத்தப்பட்ட பாடத் திட்டமோ, தேர்வு முறையோ, அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழோ கொண்ட ஒரு படிப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.


மொழி அரசியலை முன் வைத்து ஆட்சிக் கட்டிலைக் கைப்பற்றியவர்களுக்கு தமிழ் மொழியை அரியணை ஏற்றும் கடமையும் பொறுப்பும் உண்டு.

தற்போது தொழில்துறை அமைச்சரிடம், ‘தமிழ்ஆட்சி மொழி’கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

தங்கம் தென்னரசு தொழில்துறை அமைச்சராகத்தான் அனைவராலும் கருதப்படுகிறாரே அன்றி தமிழ் ஆட்சி மொழி அமைச்சராக அல்ல.

தமிழ் மொழிக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டியதும் தமிழ் வளர்ச்சிக்கென அதிக அளவில் நிதி ஒதுக்கி தீவிரமாகப் பணியாற்ற வேண்டியதும் நம்முடைய வரலாற்றுக் கடமை. நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே தமிழக முதல்வர் இதற்கான அறிவிப்பினை வெளியிட வேண்டும்.

உலகத் தாய்மொழி தினத்தில் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யத்தின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்...  டி.என்.பி.எஸ்.சி தேர்வில் இனி தமிழுக்கு முதலிடம்

Tags:    

Similar News