செய்திகள்
விபத்து

பெரம்பலூர் அருகே கல்லூரி பஸ் மோதி பள்ளி மாணவிகள் 6 பேர் காயம்

Published On 2019-10-04 15:06 GMT   |   Update On 2019-10-04 15:06 GMT
பெரம்பலூர் அருகே கல்லூரி பஸ் மோதி பள்ளி மாணவிகள் 6 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்துக்கு காரணமான டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் அரியலூர் பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்கள் தினமும் அரியலூரில் இருந்து பெரம்பலூருக்கு கல்லூரி பஸ்சில் செல்வது வழக்கம். அதேப்போல் இன்று காலை அரியலூர் பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு சொந்தமான 3 பஸ்களில் கல்லூரிக்கு சென்றனர். அரியலூர்-பெரம்பலூர் இடையே உள்ள சித்தளி பஸ் நிறுத்தம் அருகே செல்லும்போது, அங்கு குன்னம் அரசு மேல்நிலைபள்ளியில் படித்து வரும் மாணவிகள் 12பேர் நின்று கொண்டிருந்தனர். 

அப்போது அந்த வழியாக கல்லூரி பஸ்கள் செல்லும் போது திடீரென ஒரு பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பஸ் நிறுத்தத்திற்குள் புகுந்தது. இதில் சுதாரித்து கொண்ட 6 மாணவிகள், அங்குள்ள ஒரு கோவிலுக்குள் புகுந்தனர். மற்ற 6 மாணவிகள் மீதும் பஸ் மோதியது. இதில் அவர்கள் பலத்த காயமடைந்தனர். 

உடனே அவர்களை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் காயத்திரி என்ற மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 6 மாணவிகள் கோவிலுக்குள் புகுந்ததால் அவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். 

கல்லூரி பஸ்கள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு வந்ததால்தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. எனவே விபத்துக்கு காரணமான  டிரைவர்கள்மீது நடவடிக்கை எடுக்க கோரி திடீரென அப்பகுதி பொதுமக்கள் சித்தளியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய கல்லூரி பஸ்சின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

சம்பவ இடத்திற்கு மருவத்தூர் போலீசார் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 3மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News