செய்திகள்
வழக்கு பதிவு

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 595 பேர் மீது வழக்கு

Published On 2020-10-19 05:34 GMT   |   Update On 2020-10-19 05:34 GMT
குமரி மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 595 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.
நாகர்கோவில்:

தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால் விபத்துக்கள் ஏற்பட்டு அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும், காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் போன்ற போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்கும்படி அரசு பொதுமக்களிடம் வலியுறுத்தி வருகிறது. இத்தகைய போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தும், வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக ஹெல்மெட் அணியாதவர்கள் மற்றும் சீட்பெல்ட் போடாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தாமல் இருந்தனர். தற்போது தொற்று பரவல் குறைய தொடங்கியதையடுத்து, போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

குமரி மாவட்டத்தில் நேற்று நாகர்கோவில், குளச்சல், கன்னியாகுமரி மற்றும் தக்கலை ஆகிய 4 சப்-டிவிசன்களிலும் போக்குவரத்து போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 610 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக 595 பேர் மீதும், காரில் சீட்பெல்ட் அணியாமல் பயணம் செய்த 15 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர். மேலும் சில வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இத்தகைய சோதனை மேலும் தீவிரப்படுத்தப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News