செய்திகள்
அஷ்வினை பாராட்டும் சக வீரர்கள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 350 விக்கெட் கைப்பற்றி அஷ்வின் சாதனை

Published On 2019-10-06 04:48 GMT   |   Update On 2019-10-06 04:52 GMT
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதி விரைவாக 350 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்த அஷ்வினுக்கு பாராட்டு குவிந்து வருகின்றன.
விசாகப்பட்டினம்:

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் களமிறங்கியது.

இந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ரோகித் சர்மா 176 ரன்னும், மயங்க் அகர்வால் 215 ரன்னும் அடித்து அசத்தினர்.
 
தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா டீன் எல்கர், டி காக், டு பிளசிஸின் பொறுப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 431 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அஷ்வின் 7 விக்கெட் எடுத்தார்.

71 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாவது இன்னிங்சிலும் ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார். அவர் 127 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், 67 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து 395 ரன்கள் எடுத்தால் வெற்றி என தென் ஆப்பிரிக்காவுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

நேற்றைய 4ம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி ஒரு விக்கெட்டுக்கு 11 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், முதல் டெஸ்டின் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. தென் ஆப்பிரிக்கா அணி 19 ரன்கள் எடுத்திருந்தபோது டி புருன் அஷ்வின் பந்தில் அவுட்டானார்.

இந்த விக்கெட் மூலம் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 350 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலு, இலங்கை வீரர் முத்தையா முரளிதரனின் சாதனையையும் சமன் செய்துள்ளார்.

சுமார் ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு அணியில் இடம்பெற்ற இந்திய வீச்சாளர் அஸ்வின் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News