செய்திகள்
மழை

கொடைக்கானலில் இடைவிடாது பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை முடக்கம்- 2 வீடுகள் இடிந்தன

Published On 2019-10-17 11:44 GMT   |   Update On 2019-10-17 11:44 GMT
கொடைக்கானலில் இடைவிடாது பெய்த மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

கொடைக்கானல்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த 1 மாதமாகவே கொடைக்கானலில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. கடந்த சில நாட்களாக மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது.

கொடைக்கானல் மட்டுமின்றி மலை கிராமங்களிலும் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று பகலில் விட்டு விட்டு பெய்த மழை இரவில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்தது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கும் நிலை ஏற்பட்டது.

தொடர் மழையினால் கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி இயக்கப்படவில்லை. அனைத்து சுற்றுலா இடங்களும் வெறிச்சோடி காணப்பட்டது.

பெருமாள் மலை அருகே மச்சூர் கிராமத்தில் மிகப் பெரிய மரம் முறிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். மேல் மலை கிராமமான பூம்பாறையில் தங்கம் என்பவர் வீடும் புதுக்காடு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் என்பவரது வீடும் இடிந்து சேதமடைந்தது.

தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக தெரு விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் வெளியே வர அச்சமடைந்துள்ளனர். வீடு இடிந்த பகுதியில் வருவாய்த்துறையினர் வந்து பார்வையிட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். மேலும் பொதுமக்களுக்கு மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக வருவாய்த்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாகவே கொடைக்கானலில் அனைத்து நீர் நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பலத்த மழை பெய்யும் காலங்களில் கொடைக்கானலில் நிலச்சரிவு ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகும். கொடைக்கானலில் 16 இடங்கள் சேதமடைய கூடிய இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போது மழை தீவிரமடைந்து வருவதால் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக வருவாய்த்துறையினர், போலீசார், தீயணைப்பு துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக வருவாய்த்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News