செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை- மு.க.ஸ்டாலின் வழங்கினார்

Published On 2021-11-03 20:49 GMT   |   Update On 2021-11-03 20:49 GMT
கொரோனா பெருந்தொற்று பணியில் ஈடுபட்ட 1 லட்சத்து 5 ஆயிரத்து 168 பணியாளர்களுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்தார்.
சென்னை:

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட 1 லட்சத்து 5 ஆயிரத்து 168 ஊழியர்களுக்கு ரூ.196.91 கோடி ஊக்கத்தொகை வழங்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பெருந்தொற்று தடுப்புப்பணிகளில் கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய 3 மாதங்களில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறையைச் சேர்ந்த 34 ஆயிரத்து 396 நபர்கள், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையைச் சார்ந்த 13 ஆயிரத்து 371 நபர்கள், மருத்துவக்கல்விதுறையைச் சார்ந்த 49 ஆயிரத்து 908 நபர்கள், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையைச் சார்ந்த 270 நபர்கள், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் (தொழிலாளர் அரசு ஈட்டுறுதிதிட்டம்) துறையைச் சார்ந்த 962 நபர்கள், தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தைச் சார்ந்த 6 ஆயிரத்து 261 நபர்கள் என மொத்தம் 1 லட்சத்து 5 ஆயிரத்து 168 பணியாளர்கள் பணியாற்றி வந்தனர்.

2021 ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய 3 மாதங்களில் கொரோனாபெருந்தொற்று தடுப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த அரசு பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறைக்கு ரூ.65 கோடியே 11 லட்சத்து 90, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறைக்கு ரூ.28 கோடியே 19 லட்சத்து 15 ஆயிரம், மருத்துவக்கல்விதுறைக்கு ரூ.91 கோடியே 69 லட்சத்து 65 ஆயிரத்து 962, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறைக்கு ரூ.55 லட்சத்து 75 ஆயிரம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறைக்கு (தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டம்) ரூ.1 கோடியே 96 லட்சத்து 5 ஆயிரம், தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்துக்கு ரூ.9 கோடியே 39 லட்சத்து 15 ஆயிரம் என மொத்தம் 1 லட்சத்து 5 ஆயிரத்து 168 பணியாளர்களுக்கு ரூ.196 கோடியே 91 லட்சத்து 65 ஆயிரத்து 962 ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு கடந்த மாதம் 26-ந்தேதி அரசாணை வெளியிட்டது. அதன்படி, கொரோனா பெருந்தொற்று பணியில் ஈடுபட்ட 1 லட்சத்து 5 ஆயிரத்து 168 பணியாளர்களுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை சார்பில் நபார்டு திட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி, மாவட்ட கனிமவள நிதி மற்றும் ஆசிரியர் நல திட்ட நிதி ஆகியவற்றின் மூலமாக ரூ.169 கோடியே 11 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 121 அரசு பள்ளிக் கட்டிடங்கள், கிளை நூலகக் கட்டிடம் மற்றும் ஆசிரியர் இல்லத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி, காணொலிக் காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.

Tags:    

Similar News