செய்திகள்
கோவை கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு

Published On 2020-10-20 06:35 GMT   |   Update On 2020-10-20 06:35 GMT
கோவை கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை:

கொரோனா தடுப்பு நடவடிக்கையால் கோவை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறுவதில்லை. எனவே கோவை கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பொதுமக்கள் தங்களது மனுக்களை போட்டு செல்கின்றனர். அதுபோல் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அங்கிருந்த பெட்டியில் போட்டு சென்றனர்.

இதில் கோவை நியூ சித்தாபுதூர் இளங்கோநகரை சேர்ந்தவர் அமுதா (வயது 40) என்பவர் நேற்று தனது குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அவர் திடீரென்று தனது குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வந்து, அந்த பெண்ணிடம் போராட்டத்தில் ஈடுபட கூடாது. கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலக பெட்டியில் போட்டால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றனர். இதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இது குறித்து அமுதா கூறுகையில், எனது கணவரின் தாத்தா பெயரில் பட்டா உள்ள இடம் பாகப்பிரிவினை செய்யப்படாமல் உள்ளது. அதற்கான சாலையில் இருந்து எங்களது வீட்டிற்கு செல்லும் நடைபாதையை ஆக்கிரமித்து சிலர் கட்டிடம் கட்டி வருகின்றனர். இது குறித்து போலீஸ் மற்றும் வருவாய் துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுத்து கட்டிடம் கட்டும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

இதனிடையே அவர் திடீரென்று மயக்கம் அடைந்தார். உடனே உறவினர்கள் அவரை ஒரு ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தை சேர்ந்த முத்துலட்சுமி அளித்த மனுவில், எங்களது வீட்டிற்கு செல்லும் நடைபாதையை சிலர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி உள்ளனர். இதனால் நடைபாதையின் அகலம் குறைந்து விட்டது. இனதால் மனவளர்ச்சி குன்றிய எனது மகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

கோவையை அடுத்த மலுமிச்சம்பட்டி அன்புநகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், இங்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது. இங்கு நகரில் பல்வேறு இடங்களில் வசித்த ஏழைகளுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இங்கு போதிய மருத்துவ வசதி இல்லை. எனவே எங்கள் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். இந்த ப குதிக்கு ஒரு ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. அதை சரி செய்வதோடு, போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News