உள்ளூர் செய்திகள்
அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

மேட்டுப்பாளையம் அருகே மாணவிகளை பாதி வழியில் இறக்கி விட்டுச் சென்ற கண்டக்டர்

Published On 2021-12-07 04:06 GMT   |   Update On 2021-12-07 04:06 GMT
மேட்டுப்பாளையம் அருகே மாணவிகளை பாதி வழியில் இறக்கி விட்டுச் சென்ற சம்பவத்தை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுமுகை:

மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை 8 ஏ எண் கொண்ட அரசு பஸ் பெரியப்புத்தூர் கிராமத்துக்கு புறப்பட்டுச் சென்றது.

அப்போது பத்ரகாளியம்மன் கோவில் செல்லும் வழியில் உள்ள மகாதேவபுரம் பஸ் நிறுத்தத்தில் 10-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் காத்திருந்தனர். ஆனால் அங்கு பஸ் நிற்காமல் சென்றது. எனினும் 3 மாணவிகள் வேகமாக ஓடி பஸ்சில் ஏறி விட்டனர்.

நெல்லித்துறை சாலையில் நந்தவனம் அருகே வந்தபோது சில பயணிகள் பஸ்சை மறித்து ஏறினர். அவர்கள் பஸ்சில் ஏற வசதியாக கண்டக்டர் 3 மாணவிகளையும் கீழே இறங்கி ஏறுமாறு கூறினார். உடனே மாணவிகளும் கீழே இறங்கினர்.

திடீரென பஸ்சில் இடமில்லை, நீங்கள் வேறு பஸ்சில் வாருங்கள் என்று கூறி விட்டு 3 மாணவிகளையும் அங்கேயே விட்டு விட்டு கண்டக்டர் புறப்பட்டுச் சென்றார். அந்த வழியாக வேறு எந்த பஸ்களும் வராததால் மாணவிகள் 3 பேரும் நடந்தே இரவு 7 மணிக்கு வேல்நகரில் உள்ள தங்கள் வீட்டுக்கு வந்தனர். பின்னர் தாமதமாக வந்ததற்கான காரணம் குறித்து அவர்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோரும், கிராம மக்களும் திரண்டு இரவு 7.30 மணிக்கு பெரியபுத்தூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கிச் சென்ற அந்த பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் பஸ் கண்டக்டரிடமும், டிரைவரிடமும் மாணவிகளை எப்படி நடுவழியில் இறக்கி விட்டு செல்லலாம் என கூறி வாக்குவாதம் செய்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து மேட்டுப்பாளையம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இனிமேல் பள்ளி மாணவ- மாணவிகளை முறையாக பஸ்சில் ஏற்றி இறக்கி செல்வதாக டிரைவர், கண்டக்டர் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் பஸ்சை விடுவித்தனர்.

இந்த சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News