உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவிகள்

கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் 42 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வீடு தேடி சென்று உலர் உணவு பொருட்கள்

Published On 2022-01-21 10:57 GMT   |   Update On 2022-01-21 10:57 GMT
சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவியர் உட்பட அனைத்து குழந்தைகளும் பயன்பெறும் வகையில் பள்ளி வேலை நாட்களை கணக்கிட்டு 15 நாட்களுக்கு ஒருமுறை உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கொரோனா நோய் பெருந்தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ள நிலையில், குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்தும் விதத்தில் சத்துணவு பெறும் பள்ளி குழந்தைகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.

இதன்படி கடந்த 20-ந் தேதி முதல் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் உயர்நிலைப்பள்ளி மாணவ/மாணவியர் உட்பட அனைத்து குழந்தைகளும் பயன்பெறும் வகையில் பள்ளி வேலை நாட்களை கணக்கிட்டு 15 நாட்களுக்கு ஒருமுறை கீழ்க்கண்டவாறான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது.

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் உணவுப் பொருட்களின் விவரம் வருமாறு:-

அரிசி 100 கிராம் மொத்தம் 1,100 கி.கி. பருப்பு 54 கிராம், மொத்தம் 1/2 கி 94கிராம். கொண்டை கடலை/பாசி பருப்பு (வாரம் ஒருமுறை)20 கிராம் (வாரம் ஒருமுறை) மொத்தம் 40 கிராம். முட்டை 1 மொத்தம் 11 முட்டைகள்.

இதேபோன்ற உயர்நிலைப் பள்ளிமாணவர்களுக்கும் வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் குழந்தைகள் மையங்களுக்கு (அங்கன்வாடி) வரும் குழந்தைகளுக்கு 10.01.2022 முதல் அங்கன்வாடி பணியாளர்களால் சத்துணவு திட்டப் பயனாளி குழந்தைகளுக்கு அவர்தம் வீடுகளுக்கு நேரடியாக சென்று அரிசி, பருப்பு மற்றும் முட்டை உலர் உணவுப் பொருட்களாகவும், 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும், 11 வயது முதல் 14 வயது வரை உள்ள பள்ளி செல்லா வளர் இளம்பெண்கள், கருவுற்ற பெண்கள் மற்றும் பாலுட்டும் தாய்மார்களுக்கு சத்துமாவு அவர்தம் இல்லத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் உலர் உணவாக தொடர்ந்து வழங்கப்படும்.

இந்த அறிவிப்பின் மூலம் 9 மற்றும் 10 வகுப்பு பயிலும் மாணவ-மாணவியர்களுக்கும் உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது. ஏற்கனவே வழங்கப்பட்டதை விட பள்ளி சத்துணவு பயனாளிகளுக்கு தற்போது கூடுதலாக பருப்பு, முட்டை மற்றும் கொண்டைக் கடலை/பாசி பயிறும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 42,13,617 பள்ளி மாணவ-மாணவியர் பயனடைவர். இந்த உலர் ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தினை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியாளர்களால் கண்காணிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News