இந்தியா
பிரதமருடன் பிபின் ராவத்

தலைமை தளபதி உள்ளிட்ட 13 பேர் மறைவு... பிரதமர் மோடி- தலைவர்கள் இரங்கல்

Published On 2021-12-08 13:15 GMT   |   Update On 2021-12-08 16:44 GMT
பிபின் ராவத் தாய்நாட்டிற்கு மிகுந்த பக்தியுடன் சேவை செய்தவர் என உள்துறை மந்திரி அமித் ஷா தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:

குன்னூர் அருகே நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தகவலை இந்திய விமானப்படை உறுதிப்படுத்தி உள்ளது. குரூப் கேப்டன் வருண் சிங், பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் மறைவுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித் ஷா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களை இழந்தது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. நாட்டிற்காக அவர்கள் மிகுந்த தேசபக்தியுடன் சேவை செய்தனர். இந்த துயரமான தருணத்தில் என் எண்ணங்கள் எல்லாம் இறந்தவர்களின் குடும்பங்களுடன் உள்ளன.

ஜெனரல் பிபின் ராவத் மிகச்சிறந்த ராணுவ வீரர். உண்மையான தேசபக்தரான அவர், நமது ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு எந்திரங்களை நவீனமயமாக்குவதில் முக்கிய பங்காற்றினார். அவரது மறைவு என்னை மிகவும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. ஓம் சாந்தி.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

‘நமது தலைமை தளபதி பிபின் ராவத் துணிச்சலான வீரர்களில் ஒருவர். தாய்நாட்டிற்கு மிகுந்த பக்தியுடன் சேவை செய்தவர். மற்றவர்களுக்கு உதாரணமாக திகழும் அவரது பங்களிப்புகள் மற்றும் அர்ப்பணிப்புகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது’ என அமித் ஷா தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News