லைஃப்ஸ்டைல்
சித்த மருத்துவ வழிமுறைகள்

கொரோனா 3-வது அலையில் இருந்து தப்ப சித்த மருத்துவ வழிமுறைகள்

Published On 2021-06-30 07:39 GMT   |   Update On 2021-06-30 07:39 GMT
கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை முடிவுக்கு வரும் நிலையில், 3-வது அலை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று மருத்துவ துறையினர் கூறி வருகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 3-வது அலையை எதிர்கொள்ளும் வகையில் படுக்கைகள் தயாராக உள்ளன. குறிப்பாக கொரோனா 3-வது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்கிற தகவல்  வைரலாகி இருக்கிறது.

அதே நேரத்தில் 2-வது அலையிலேயே குழந்தைகளை கொரோனா தொற்று அதிகம் பாதித்துள்ளதாகவும், 3-வது அலையில் தனியாக எந்தவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. பெரியவர்களை போன்றே குழந்தைகளையும் கொரோனா தாக்குவதற்கு வாய்ப்புள்ளது என்கிற கருத்தும் நிலவுகிறது.
கைகொடுத்த சித்த மருத்துவம்

கடந்த காலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு பெரிதும் கைகொடுத்தது சித்த மருத்துவம் என்றால் அதனை யாரும் மறுக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு தமிழகத்தில்
கொரோனா
நோய் தொற்று நோயாளிகளுக்கு சிறப்பான சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

முதல் அலையிலும் சரி, 2-வது அலையிலும் சரி கொரோனா நோயாளிகள் பலர் பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவத்தால் குணம் அடைந்துள் ளனர். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு தற் போது மருந்து, மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா 2-வது அலை தாக்குதலின் போதும் நோயாளிகள் நலன் கருதி தமிழக அரசு சித்த மருத்துவ சிறப்பு மையங்களை தொடங்கி இருக்கிறது. சென்னையில் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி, வேப்பேரி பெரியார் மையம்,  போரூர் வெங்கடேஸ்வரா கல்லூரி, மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரி, சூரப்பட்டு வேலம் மாள் கல்லூரி ஆகிய 5 இடங்களில் சித்த மருத்துவ சிறப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகம் முழு வதும் 50 மையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு
கொரோனா
நோயாளி களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்திய மருத்துவத்துறை இயக்குனர் கணேஷ், இணை இயக்குனர் பேராசிரியர் பார்த்திபன் ஆகியோரது ஆலோசனையின்படி டாக்டர்கள் பிச்சையாகுமார், சசிகுமார் ஆகியோரை ஒருங்கிணைப்பாளராக கொண்டு இந்த மையங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கொரோனா 3-வது அலையில் இருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள இப்போதே தகுந்த முன்னெச்சரிக்கையோடு செயல் பட வேண்டும் என்கிறார் சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரி விரிவுரையாளரான  சாய் சதீஷ். இவர் மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் உள்ள சித்த மருத்துவ மையத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார்.

இதுதொடர்பாக அவர்  மேலும் கூறும்போது, ‘‘கொரோனா 3-ம் அலையில் முன்னெச்சரிக்கையே முதல் மருந்தாகும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வரும் காலங்களில் மிகுந்த கவனத்தோடு பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக அவர்கள் சாப்பிடும் உணவு வகைகளிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை அவர்களுக்கு அதிகமாக கொடுக்க வேண்டும். அப்போதுதான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இந்த வைரஸ் தொற்று காலத்தில் அனைவரும் வயிறு உபாதைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் நாம் பழங்களை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். மாதுளை, சாத்துக்குடி, எலுமிச்சை, அத்தி, வாழைப் பழங்களை அதிகம் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

குழந்தைகள், பெரியவர்களை போல பொறுமையாக மென்று சாப்பிட மாட்டார்கள். இதனால் சில நேரங்களில் அவர்களுக்கு செரிமான பிரச்சினை ஏற்படும். தறபோதுள்ள சூழலில் உடலில் செரிமான பிரச்சினை ஏற்படாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக சித்த மருத்துவத்தில் உரை மாத்திரை குழந்தைகளுக்கான நல்ல செரிமான மருந்தாக உள்ளது.

பெரியவர்களும் இதை சாப்பிடலாம். சிறிய அளவிலான உரை மாத்திரையை எடுத்து அதில் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அதுபோன்று தொடர்ந்து 6 மாதங்கள் இந்த மாத்திரையை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் செரிமான பிரச்சினை வராது.

உரை மாத்திரையில் அதிமதுரம், வசம்பு, ஜாதிக் காய், கடுக்காய், பூண்டு, திப்பிலி, பெருங்காயம், இஞ்சி, அக்ர ஹாரம் உள் ளிட்ட 10 மருத்துவ பொருட்கள் அடங்கி உள்ளது. இதனால் உடலுக்கு எந்த கேடும் ஏற்படாது. எனவே குழந்தைகளுக்கு தயங்காமல் இந்த உரை மாத்திரையை கொடுத்து வரலாம்.  இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். கொரோனா தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு இது உதவும்.

அதே நேரத்தில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமலும் இந்த நேரத்தில் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். இதுதவிர சித்த மருத்துவ மருந்துகளான தாளிசாதி சூரண மருந்தையும் தேனில் கலந்து சாப்பிடலாம்.

பூண்டு தேன் குழந்தைகளுக்கு நல்ல மருந்தாகும். இதனை வீட்டிலேயே தயாரிக்கலாம். 5 மில்லி பூண்டு தண்ணீரில் தேன் கலந்து தொடர்ந்து குழந்தைகளுக்கு கொடுத்து வருவதன் மூலம் மூச்சுப்பாதையில் எந்தவித சுவாச பிரச்சினைகளும் ஏற் படாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

இந்த வைரஸ் தொற்று காலத்தில் குழந்தைகள் வயிற்றில் மந்தநிலையை ஏற்படுத்தும் பழங்களை தவிர்க்க வேண்டும். மாம் பழம், பலாப்பழம் ஆகிய வற்றை அதிகமாக குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. இதன் மூலம் செரிமான பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.

தினமும் காலை வெயிலில் 5 நிமிடம் குழந்தைகளை நிற்க வைப்பது நல்லது. இதன் மூலம் வைட்டமின் ‘டி’ சத்து கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதற்கு வைட்டமின் சத்து மிகவும் அவசியமானதாகும்.

இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மேற்கொண்டால் நிச்சயம் கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் சித்தா டாக்டர் சாய்சதீஷ் தெரிவித்துள்ளார்.

உஷாராக இருப்போம்...
கொரோனாவை விரட்டுவோம்...

சித்த மருத்துவம் தொடர்பாக
உங்களுக்கு என்ன தகவல் வேண்டும்?
7358723063-க்கு
போன் செய்யுங்கள்

சித்த மருத்துவம் தொடர்பாக உங்களுக்கு என்ன தகவல் வேண்டும்? உங்களது அத்தனை சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை அளிக்க காத்து இருக்கிறது ஒருங்கிணைந்த சித்த மருத்துவ கட்டளை மையம். 7358730363- என்ற எண்ணை தொடர்பு கொண்டால் சித்த மருத்துவம் தொடர்பாக தேவையான தகவல்களை பெறலாம். இந்த எண் காலை 8மணியில் இருந்து இரவு 8 மணி வரை செயல்படும்.

Tags:    

Similar News