ஆன்மிகம்
போக நந்தீஸ்வரர் கோவில்

போக நந்தீஸ்வரர் கோவிலில் இன்று கார்த்திகை தீப திருவிழா

Published On 2020-11-16 08:49 GMT   |   Update On 2020-11-16 08:49 GMT
போகநந்தீஸ்வரா கோவிலில் இன்று(திங்கட்கிழமை) கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்பட உள்ளதாகவும், கோவிலுக்கு பக்தர்கள் வர கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட கலெக்டர் லதா கூறினார்.
சிக்பள்ளாப்பூர்(மாவட்டம்) தாலுகா நந்தி கிராமத்தில் போகநந்தீஸ்வரா கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தென்காசி என்றும் அழைக்கப்படுவது உண்டு. இந்த கோவில் மிகவும் பிரசித்திபெற்றதாகும். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமை அன்று இக்கோவிலில் தீப திருவிழா கொண்டாடப்படும். அப்போது கோவிலில் மகா தீபம் ஏற்றப்படும். மேலும் விசேஷ பூஜைகளும் நடத்தப்படும். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் விசேஷ பூஜையில் கலந்து கொண்டு தீபத்தை தரிசித்து வழிபடுவார்கள்.

அதேபோல் இந்த ஆண்டும் கார்த்திகை மாதம் திங்கட்கிழமையான இன்று மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. மேலும் விசேஷ பூஜைகளும் நடத்தப்பட இருக்கிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக கோவிலுக்கு பக்தர்கள் வர கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நேற்று காலையில் சிக்பள்ளாப்பூர் மாவட்ட கலெக்டர் லதா, போகநந்தீஸ்வரா கோவிலுக்கு வந்து அங்கு கார்த்திகை தீப திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பார்வையிட்டார். மேலும் கோவிலுக்குள் பக்தர்களை எவ்வாறு அனுப்புவது, கோவிலில் கொரோனா விதிகள் அனைத்து கடைப்பிடிக்கப்படுகிறதா? என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

போகந்தீஸ்வரா கோவிலில் வழக்கம்போல் கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கோவிலுக்கு பக்தர்கள் வர கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி நாளை(அதாவது இன்று) காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால் ஒருமுறைக்கு தலா 300 பேர் வீதம் மட்டுமே கோவிலுக்குள் அனுப்பப்பட உள்ளனர். முக கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல்வெப்ப நிலையும் பரிசோதிக்கப்படும். கோவிலுக்குள் பக்தர்கள் சாமி தரிசனம் மட்டுமே செய்ய வேண்டும்.

சாமிக்கு கற்பூரம் ஏற்றுவது, தீபம் காட்டுவது போன்றவற்றில் ஈடுபடக்கூடாது. இந்த கட்டுப்பாடுகளை மீறும் பக்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் லதா கூறினார். இந்த சந்தர்ப்பத்தில் கலெக்டர் லதாவுடன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் உடனிருந்தார்.
Tags:    

Similar News