வழிபாடு
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்

Published On 2022-04-16 08:03 GMT   |   Update On 2022-04-16 08:03 GMT
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக இன்று (சனிக்கிழமை) சுவாமிக்கு தீர்த்தவாரி அபிஷேகங்கள் நடைபெறுகிறது.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. இதில் நேற்று முன்தினம் அபிராமி அம்மன்-பத்மகிரீசுவரர் திருக்கல்யாணம் நடந்தது. இந்தநிலையில் சித்திரை திருவிழாவில் முத்திரை நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி மாலை 4 மணி அளவில் அபிராமி அம்மன்-சுவாமி பத்மகிரீசுவரருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. அதன்பிறகு சுவாமி யாகசாலையை சுற்றி வந்து தரிசனம் செய்தல் நடந்தது.

பின்னர் திருத்தேரில் எழுந்தருளல், தீபாராதனை நடைபெற்று தேரோட்டம் தொடங்கியது. இதில் நகரின் முக்கிய பிரமுகர்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேரோட்டம் திண்டுக்கல் நகரின் 4 ரதவீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை அடைந்தது.

திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக இன்று (சனிக்கிழமை) சுவாமிக்கு தீர்த்தவாரி அபிஷேகங்கள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜெயசெல்வம், கணக்கர் ஜெயபிரகாஷ் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News