செய்திகள்
கோப்புபடம்

மக்கள் பயன்பாட்டுக்காக உடுமலை நடைமேம்பாலம் திறக்கப்படுமா?

Published On 2021-07-24 10:34 GMT   |   Update On 2021-07-24 10:34 GMT
ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு பொதுப்போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் நடை மேம்பாலம் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை.
உடுமலை:

கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையையட்டி உடுமலை பஸ் நிலையம் அமைந்துள்ளது. பஸ்சில் இருந்து இறங்கி வரும் மக்கள் உடுமலை அரசு மருத்துவமனை, தாலுகா அலுவலகம் மற்றும் கடைகளுக்கு செல்ல தேசிய நெடுஞ்சாலையை கடக்க வேண்டும். நூற்றுக்கணக்கான மக்கள் சாலையை கடக்கும் நிலையில் தொடர் வாகன போக்குவரத்து காரணமாக சாலையை கடப்பதில் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் என இரு தரப்பினருக்கும் சிரமம் ஏற்பட்டு, விபத்துக்களும் ஏற்பட்டு வந்தது.

இதற்கு தீர்வு காணும் வகையில் பஸ் நிலையம் அருகே ரூ.1.50 கோடி செலவில், ‘லிப்ட்’ உடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி கடந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கியது.

நீண்ட இழுபறிக்குப்பிறகு சில மாதங்களுக்கு முன் பணிகள் நிறைவு பெற்றது. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு பொதுப்போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் நடை மேம்பாலம் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. இதனால் பஸ் நிலையத்தில் இருந்து வரும் மக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடக்க சிரமப்பட்டு வருகின்றனர். 

கட்டுமான பணிகள் ஓராண்டாக நடந்து வரும் நிலையில், ‘லிப்ட்’ மற்றும் இதர கட்டமைப்புகள் செயல்பாட்டின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. எனவே நடைமேம்பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News