செய்திகள்
அரிசி, பருப்பு, முட்டை ஆகிய சத்துணவு பொருட்களை மாணவர்களின் பெற்றோர்களுக்கு வழங்கிய போது எடுத்த படம்.

சத்துணவு பொருட்களை மாணவ-மாணவிகளின் பெற்றோரிடம் வழங்கிய ஆசிரியர்கள்

Published On 2021-06-09 03:19 GMT   |   Update On 2021-06-09 03:19 GMT
கொரோனா காரணமாக பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் சத்துணவு பொருட்களை மாணவ-மாணவிகளின் பெற்றோரிடம் ஆசிரியர்கள் வழங்கினர்.
சென்னை:

பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் படிக்கும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு மதிய உணவு ‘சத்துணவு' என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கின்றன.

பள்ளிகள் மூடப்பட்டு இருந்தாலும், மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணவுக்கான பொருட்களை அந்தந்த மாணவ-மாணவிகளுக்கு வழங்க அரசு உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி, கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றின் முதல் அலையில் இருந்து மாணவ-மாணவிகளுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாதமும் சத்துணவு சாப்பிடும் மாணவ-மாணவிகளை நேரடியாக பள்ளிக்கு வரவழைத்து சத்துணவு பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் முட்டை ஆகியவை வழங்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக தற்போதும் பரவிவரும் கொரோனாவின் 2-வது அலையிலும் சத்துணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த முறை நோய்த் தொற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மாணவ-மாணவிகளின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து சத்துணவு பொருட்கள் ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படுகின்றன. அதன்படி, ஜூன் மாதத்துக்கு 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர் ஒருவருக்கு 2 கிலோ 200 கிராம் அரிசியும், 880 கிராம் பருப்பும், 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர் ஒருவருக்கு 3 கிலோ 300 கிராம் அரிசியும், 1 கிலோ 230 கிராம் பருப்பும், இதுதவிர இருதரப்பினருக்கும் 10 முட்டைகளும் வழங்கப்பட்டன. பெற்றோர் பள்ளிக்கு வந்து அதனை பெற்றுச்சென்றனர்.
Tags:    

Similar News