செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

வங்கிகளில் பரவும் கொரோனா- வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

Published On 2021-05-01 10:12 GMT   |   Update On 2021-05-01 10:12 GMT
வங்கி ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது. ஒரு நாள் உச்சத்தை தொடும் போது பொதுமக்கள் அச்சமடைவதும், அடுத்த நாள் குறையும்போது சற்று நிம்மதி அடைந்து வருகின்றனர். இருப்பினும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராமல் தொடர்ந்து பரவி வருவது அனைவரையும் கவலையடைய செய்துள்ளது.

ஒரு ஆண்டு கடந்தும் கொரோனா தொற்று பரவி வருவதால் பொதுமக்கள் என்னசெய்வ தென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை முழுமையாக கடைப்பிடித்து வருகின்றனர். குறிப்பாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவுக்கு மேல் உள்ள ஜவுளி, நகைக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதே போல் வங்கிகளில் பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மதியம் 2 மணி நேரம் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் வங்கிகளில் ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது ஊழியர்கள் மட்டுமின்றி வாடிக்கையாளர்களையும் அதிர்ச்சியடைய செய்து வருகிறது.

இதுவரை திருப்பூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரியும் ஊழியர், மேலாளர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதன் காரணமாக வங்கிகள் மூடப்பட்டன. பின்னர் கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு திறக்கப்பட்டு உள்ளன.

அது போல் நேற்று திருப்பூர் குமரன் சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரியும் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வங்கியானது மூடப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தினர். வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இப்படி தொடர்ச்சியாக வங்கி ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே வங்கி நிர்வாகங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News