செய்திகள்
தங்ககாசு டோக்கன்

நாமக்கல் தொகுதியில் தி.மு.க.வினர் தங்ககாசு டோக்கன் வினியோகித்ததாக புகார்

Published On 2021-04-06 09:14 GMT   |   Update On 2021-04-06 09:14 GMT
வீடு, வீடாக சென்று தி.மு.க.வினர் தங்ககாசு டோக்கன் வினியோகம் செய்தது தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. தரப்பில் புகார் செய்யப்பட்டது.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறதா? என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். ஆனால் பல இடங்களில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக பரவலாக புகார்கள் வந்தன.

இந்த நிலையில், நாமக்கல் தொகுதிக்குட்பட்ட நரசிம்மர் கோவில் அருகே ரங்கர் சன்னதி படிவாசல் பகுதியில் உள்ள பெரியதேர் அரசு தொடக்கப்பள்ளியில் வாக்குசாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்குசாவடி மையம் அருகே உள்ள வீடுகளில் வசிக்கும் வாக்காளர்களுக்கு இன்று காலை தி.மு.க.வினர் தங்க காசு டோக்கன் வினியோகம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக ஒரு வீட்டில் 5 ஓட்டுக்கள் இருக்கும் பட்சத்தில் அந்த வீட்டிற்கு ஒரு தங்க காசு டோக்கன் என்ற முறையில் வழங்கப்பட்டதாக தெரிகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த அ.தி.மு.க.வினர் அங்கு திரண்டு வந்து ஓட்டுக்கு டோக்கன் வினியோகம் செய்த தி.மு.க.வினரிடம் இருந்து 100-க்கும் மேற்பட்ட தங்க காசு டோக்கனை வாங்கி கிழித்து எறிந்தனர். இந்த டோக்கனில் வாக்காளருடைய பெயர், முகவரி, குடும்ப அட்டை எண், செல்போன் எண் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அதில் தங்ககாசு வடிவில் மாதிரி உருவம் பதிக்கப்பட்டிருந்தது.

இந்த டோக்கன் வைத்திருந்த பையை அ.தி.மு.க.வினர் பிடுங்கி அருகில் இருந்த சாக்கடை கால்வாயில் வீசினர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் சூழ்நிலை உருவானது. அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்து 2 கட்சியினரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.

தி.மு.க.வுக்கு வாக்களித்துவிட்டு அந்த டோக்கனை கொண்டு வந்து காண்பித்தால் தங்க நாணயம் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என வாக்காளரிடம் கூறி தி.மு.க.வினர் விநியோகம் செய்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

வீடு, வீடாக சென்று தி.மு.க.வினர் தங்ககாசு டோக்கன் வினியோகம் செய்தது தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. தரப்பில் புகார் செய்யப்பட்டது.
Tags:    

Similar News