ஆன்மிகம்
திருவண்ணாமலையில் அமைந்த அஷ்ட லிங்கங்கள்

திருவண்ணாமலையில் அமைந்த அஷ்ட லிங்கங்கள்

Published On 2020-12-07 08:56 GMT   |   Update On 2020-12-07 08:56 GMT
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என எட்டு லிங்கங்கள் அமைந்துள்ளன.
நினைத்தாலே முக்தி தரும் கோவிலாக விளங்குவது, திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில். இங்கு சிவனே, மலையாக அமைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த மலையை சுற்றிலும் அமைந்த கிரிவலப்பாதையானது, 14 கிலோமீட்டர் தொலைவு கொண்டதாகும். இந்த கிரிவலப் பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என எட்டு லிங்கங்கள் அமைந்துள்ளன.

இந்திர லிங்கம்

கிரிவலம் வரும் பாதையில் முதலில் உள்ளது, இந்திர லிங்கம். அண்ணாமலையார் கோவிலின் ராஜகோபுரத்திற்கு வெகு அருகில், கிழக்கு திசையில் அமைந்துள்ளது. தேவர்களின் தலைவனான இந்திரனே நேரடியாக இங்கு வந்து, இந்த லிங்கத்தை வழிபட்டதாக ஐதீகம். நவக்கிரகங்களின் நாயகனான சூரியன் மற்றும் சுக்ரனின் ஆட்சி பெற்ற இந்த லிங்கத்தை வணங்கினால் நீண்ட ஆயுளும், பெரும் செல்வமும், அரச போக வாழ்வும் கிடைக்கும். ரிஷபம் மற்றம் துலாம் ராசிக்காரர்கள் வணங்கவேண்டிய லிங்கம்.

அக்னி லிங்கம்

கிரிவலப்பாதையில் தென் கிழக்கு திசையில் அக்னி லிங்கம் அமைந்துள்ளது. சந்திரனுக்கு ஜோதி வடிவில் காட்சியளித்த லிங்கமே, குளிர்ந்து அக்னி லிங்கமாக காட்சியளிக்கிறது. சேஷாத்திரி சுவாமிகளின் ஆசிரமத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள இந்த லிங்கத்தை வழிபட்டு கிரிவலம் வந்தால், சஞ்சலங்கள் நீங்கி மனம் தெளிவு பிறக்கும் என்பது ஐதீகம். சிம்ம ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய லிங்கமாகும்.

எம லிங்கம்

கிரிவலப்பாதையில் தென் திசையில் மூன்றாவதாக அமைந்துள்ளது எமலிங்கம். தென் திசையின் அதிபதியான எமனுக்கு சிவபெருமான் தாமரை மலரில் லிங்க வடிவில் தோன்றினார். எம லிங்கத்தை வழிபட்டால் ஆயுள் விருத்தியாகும். தேவையற்ற வீண் செலவுகள் குறைந்து பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. விருச்சிக ராசிக்காரர்கள் வணங்கவேண்டிய லிங்கம்.

வாயு லிங்கம்

கிரிவலப் பாதையில் அடுத்ததாக வரும் லிங்கம் வாயு லிங்கமாகும். இது வடமேற்கு திசையில் அமைந்துள்ளதாகும். வாயு பகவானால் உருவாக்கப்பட்டது. பஞ்ச கிருதிக்கா என்ற தேவலோக மலரின் வாசமாகத் தோன்றிய ஈசன் வாயு பகவானை இங்கு தான் ஆட்கொண்டார். கடக ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய லிங்கமாகும். இந்த லிங்கத்தை வணங்கி கிரிவலம் வருவோர்க்கு, வடமேற்கு திசையின் அதிபதியான கேது பகவானின் பரிபூரண ஆசியும் சகல யோகங்களும் கிட்டும்.

நிருதி லிங்கம்

கிரிவலம் வரும் பாதையில் அடுத்ததாக அமைந்துள்ளது நிருதி லிங்கம். இது தென் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. தென்மேற்கு திசையின் அதிபதியான நிருதி பகவானுக்கு, நிருதீஸ்வரராக தோன்றி ஈசன் காட்சி கொடுத்த இடமாகும். சனி தீர்த்தம் என்ற குளம் இதன் அருகில் அமைந்துள்ளது. இவரை வழிபட்டால் குழந்தை வரம் கிட்டும். அதோடு மன நிம்மதியும் கிடைக்கும். மேஷ ராசிக்காரர்கள் வழிபடவேண்டிய தலமாகும்.

வருண லிங்கம்

கிரிவலப் பாதையில் ஐந்தாவதாக உள்ளது வருண லிங்கம். வருண பகவானுக்கு ஈசன் நீர் வடிவில் லிங்கமாக தரிசனம் தந்தருளிய தலமாகும். இந்த லிங்கத்தை வணங்கினால் மேற்கு திசைக்கு அதிபதியான சனி பகவானின் அருளைப் பெறலாம். தீராத வினைகளையும் தீர்த்து வைக்கும் தலமாகும். மேலும், இங்கு வருண தீர்த்தம் என்ற குளம் உள்ளது. மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் வழிபடவேண்டிய லிங்கமாகும்.

குபேர லிங்கம்

கிரிவலப் பாதையில் ஏழாவதாக அமைந்துள்ள லிங்கம் குபேர லிங்கமாகும். வட திசையின் அதிபதியான குபேரன், இந்த இடத்தில் இருந்து அண்ணாமலையாரை தரிசித்து வணங்கிய பிறகு, தான் இழந்த அனைத்து செல்வங்களையும் திரும்பவும் பெற்றார். பக்தர்கள் செல்வச் செழிப்புடன் வாழ குபேர லிங்கத்தை வழிபடவேண்டியது அவசியமாகும். இது குருபகவானின் ஆட்சி செய்யும் லிங்கமாகும். தனுசு மற்றும் மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய லிங்கமாகும்.

ஈசான்ய லிங்கம்

சுமார் 14 கி.மீ சுற்றளவுள்ள கிரிவலப் பாதையில் வடகிழக்கு திசையில் அமைந்துள்ள லிங்கமாகும். நந்தீஸ்வரர் வணங்கிய லிங்கமாகும். எம்பெருமான் ஈசனைத் தவிர அனைத்துமே நிலையற்றது என்பதை உணர்த்தும் ஞான சன்னிதி இதுவாகும். புதன் கிரகம் ஈசான்ய லிங்கத்தை ஆட்சி செய்வதால், அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்று விளங்கலாம். மிதுனம் மற்றும் கன்னி ராசிக் காரர்கள் வழிபடவேண்டிய லிங்கமாகும்.
Tags:    

Similar News