உள்ளூர் செய்திகள்
செடிகளில் விளைந்துள்ள ஏலக்காய்

கொடைக்கானலில் ஏலக்காய் விளைச்சல்

Published On 2022-01-12 08:06 GMT   |   Update On 2022-01-12 08:06 GMT
கொடைக்கானல் மலைக்கிராமங்களில் ஏலக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதால் கிடங்கு அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
கொடைக்கானல்:

கொடைக்கானலில் மேல்மலை, கீழ்மலை என 50க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் அடங்கிய பகுதியாகும். மேலும் இந்த மலைக்கிராமங்களில் ஆங்கிலக் காய்கறிகள் என அழைக்கப்படும் கேரட், பீட்ரூட், பீன்ஸ் போன்ற காய்கறி வகைகள், பழங்கள் மற்றும் பணப்பயிர்கள் என பருவநிலைக்கு ஏற்றவாறு விளைவிக்கப்படுகிறது.

கோம்பைக்காடு, வெள்ள கவி, உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்களில் மிளகு, காப்பி என பணப்பயிர்கள் பயிரிட்டு வந்த நிலையில் தற்போது ஏலக்காயை ஆர்வத்துடன் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்ய தொடங்கியுள்ளனர்.

ஏலக்காய் விளைய 2 வருட காலம் ஆகும். தற்போது ஏலக்காய்கள் விளைச்சல் அடைந்துள்ள நிலையில் அறுவடைக்கு தயாராக உள்ளது.
 
அறுவடை செய்த ஏலக்காயை பதப்படுத் துவதற்கு கொடைக்கானல் மலைப்பகுதியில் பதப்படுத்தும் கிடங்கு இல்லாததால் கேரளா கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு தொலைதூரத்துக்கு ஏலக்காயை கொண்டு செல்லும் போது எடுப்பு கூலி கூட கிடைக்கவில்லை என்று மலைக்கிராம விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.  

மேலும் கேரளாவில் ஏலக்காய் பதப்படுத்தும் கிடங்கு உள்ளதால் பச்சை நிறம் மாறாமல் கிலோ ரூ.6,000க்கு விற்கப்படுகிறது. ஆனால் இங்குள்ள ஏலக்காய்க்கு போதிய விலை கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

கொடைக்கானல் மலைப்பகுதியில் ஏலக்காய் பதப்படுத்தும் கிடங்கு அமைத்தால் தங்கள் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையும் என்றும் இதனை தமிழக அரசு கவனம் செலுத்தி ஏலக்காய் பதப்படுத்தும் கிடங்கு அமைத்துத்தர வேண்டும் என மலைவாழ் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News