ஆன்மிகம்
தீவட்டி ஊர்வலம் நடந்ததையும், அதில் பங்கேற்ற திரளான பக்தர்களையும் படத்தில் காணலாம்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீவட்டி ஊர்வலம்

Published On 2021-03-09 03:47 GMT   |   Update On 2021-03-09 03:47 GMT
குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்றான மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீவட்டி ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இக்கோவிலில் மாசித்திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் 3-ம் நாள் முதல் 9-ம் நாள் வரை காலை 9.30 மணிக்கும் இரவு 9.30 மணிக்கும் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் நடந்தது. 6-ம் நாள் இரவு 12 மணிக்கு வலிய படுக்கை என்னும் மகா பூஜை நடந்தது. இப்பூஜை வருடத்தில் மூன்று முறை நடைபெறும். கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்றும், மாசித் திருவிழாவின் ஆறாம் நாள் அன்றும், மீன பரணி கொடை விழா அன்றும் நடைபெறும்.

விழாவில் 9-ம் நாளான நேற்று காலை 6.30 மணிக்கு உஷ பூஜையும், 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், 11 மணிக்கு சந்தனகாப்பும், மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜையும், 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், பெரிய சக்கர தீவட்டி ஊர்வலமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

விழாவின் கடைசி நாளான இன்று அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தா கோவிலில் இருந்து புனித நீர் கொண்டு வருதலும், 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், 4.30 மணிக்கு அடியந்திர பூஜையும், 6 மணிக்கு குத்தியோட்டமும், இரவு 8 மணிக்கு இன்னிசை விருந்தும், 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜையும் நடக்கிறது.

இந்த பூஜையின் சிறப்பு அம்சமாக பல்வேறு வகையான உணவுப் பதார்த்தங்கள் அடங்கிய சுமார் 20-க்கும் மேற்பட்ட உணவுகள் சுத்தமான முறையில் விரதம் இருந்து தயாரிக்கப்படுகிறது. பின்னர் சன்னதி அருகில் உள்ள சாஸ்தா கோவில் பக்கமிருந்து ஒடுக்கு பூஜை பவனி வருகிறது. பூஜைக்கு எடுத்துக் கொள்ளப்படும் உணவு வகைகளை பானைகளில் வெள்ளைத் துணிகளால் மூடி ஊர்வலமாக எடுத்து வரப்படும். பூஜைக்கான உணவு வகைகளை வாய்ப்பூட்டு கட்டி பூசாரிகள் தலையில் சுமந்து எடுத்து வருகிறார்கள். பின்னர் கோவிலை ஒருமுறை வலம் வந்து அம்மனின் முன்பு உணவு வகைகள் வைக்கப்படும்.

பின்னர் நடை அடைக்கப்பட்டு உணவு வகைகள் அம்மனுக்கு படைக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து குருதி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் நடை திறக்கப்பட்டு ஒடுக்குபூஜை நடக்கிறது. ஒடுக்கு பூஜையின் போது கோவிலின் வளாகத்திலும், ஒடுக்கு பவனியிலும் பக்தர்கள் அதிகமாக கலந்து கொள்வார்கள்.

Tags:    

Similar News