ஆன்மிகம்
திருமண தடை, நவகிரக தோஷம் போக்கும் பஞ்ச மங்கள திருத்தலம்

திருமண தடை, நவகிரக தோஷம் போக்கும் பஞ்ச மங்கள திருத்தலம்

Published On 2021-05-03 08:53 GMT   |   Update On 2021-05-03 08:53 GMT
நவக்கிரக தோஷம், திருமணத் தடை, குழந்தை பாக்கியம், சுமங்கலி பாக்கியம், எதிரி பயம் உள்ளிட்ட பலவற்றுக்கு இந்த ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருமங்கலக்குடி. இங்கு மங்களாம்பிகை உடனாய பிராணநாதேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயமானது, ‘பஞ்ச மங்கள ஷேத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது.

ஊரின் பெயர் - திருமங்கலக்குடி. அம்பாள் பெயர்- மங்களாம்பிகை. தல விநாயகர் பெயர்- மங்கள விநாயகர். கோவில் விமானம் - மங்கள விமானம். தீர்த்தம் - மங்கள தீர்த்தம். இப்படி 5 இடங்களில் மங்களத்தை கொண்டிருப்பதால், இந்தத் தலம் ‘பஞ்ச மங்கள ஷேத்திரம்’ ஆனது.

நவக்கிரகங்கள் தங்களின் சாபம் நீங்க, வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் படைத்து இறைவனை வழிபட்டதாக தல புராணம் சொல்கிறது. எனவே இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் உச்சிகால பூஜையின் போது, உப்பில்லாத தயிர் சாதம் சுவாமிக்கு நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. பித்ரு தோஷம் உள்ளவர்கள், முன்னோர்களுக்கு முறையாக தர்ப்பணம் செய்யாதவர்கள், இத்தல இறைவனுக்கு தயிர் சாதம் நைவேத்தியமாக படைத்து வழிபடலாம்.

இந்தக் கோவிலின் தல விருட்சமாக கோங்கு, வெள்ளெருக்கு ஆகிய மரங்கள் இருக்கின்றன. நவக்கிரக தோஷம், திருமணத் தடை, குழந்தை பாக்கியம், சுமங்கலி பாக்கியம், எதிரி பயம் உள்ளிட்ட பலவற்றுக்கு இந்த ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.

ஆலய பிரகாரத்தில் நடராஜர் சன்னிதியில் இரண்டு நடராஜர்கள், சிவகாமி அம்பாளுடன் இருக்கின்றனர். பிரதான நடராஜருக்கு அருகில் இருக்கும் மற்றொரு நடராஜரின் பாதத்திற்கு கீழே, பூதகணம் ஒன்று இசைக்கருவி வாசித்தபடி இருக்கிறது. இந்த சன்னிதியில் மரகதலிங்கம் ஒன்றும் இருக்கிறது. தினமும் உச்சிகாலத்தில் மட்டும் இந்த லிங்கத்திற்கு பூஜை செய்கிறார்கள். அப்போது வலம்புரி சங்கில் பால், பன்னீர், தேன், சந்தனம் ஆகியவை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேக தீர்த்தத்தை பருகினால் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

அம்பாளின் வலது கையில் எப்போதும் தாலிக்கயிறு இருக்கும். அம்பாளை வழிபடும் பெண்களுக்கு, தாலிக்கயிறு பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது. இதை வாங்கிக்கொள்ளும் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். திருமணம் நடைபெற்ற பெண்கள், தீர்க்க சுமங்கலியாக வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ள ஆடுதுறையை அடைந்து, அங்கிருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் சென்றால், திருமங்கலக்குடியை அடையலாம்.
Tags:    

Similar News