உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ராக்கெட் ஏவுதளம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட இடத்திற்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-01-11 09:28 GMT   |   Update On 2022-01-11 13:52 GMT
உடன்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட இடத்திற்கு கூடுதல் இழப்பீடு வழங்கவேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடன்குடி:

 உடன்குடி அருகே உள்ள கூடல்நகர் ஊர்த்தலைவர் சொர்ணபாண்டி, ஒருங்கிணைப்பாளர் சுயம்பு மற்றும் ஊர்மக்கள்  கையெழுத்திட்டு   முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், கனிமொழி எம்.பி., கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் இஸ்ரோ நிலம் கையகப்படுத்தும் அலுவலர்கள் ஆகியோருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

உடன்குடி ஊராட்சி ஒன்றியம் மாதவன் குறிச்சி ஊராட்சி கூடல் நகர் பகுதியில் அமையவுள்ள ராக்கெட் ஏவுதள மையத்தை நாங்கள்   வரவேற்கிறோம். அதற்காக எங்களது நிலங்களை கையகப்படுத்தும் அரசின் முடிவுக்கு நாங்கள் சம்மதிக்கிறோம்.

55 குடும்பங்களை சேர்ந்த 200 பேர் இருக்கும் எங்களுக்கு உடன்குடி, -திசையன்விளை பிரதான சாலையில் மேல்பகுதியில் குடியிருப்பு அமைத்துத் தர கோருகிறோம். 

 முன்பு எங்களை சந்தித்த அதிகாரிகள் நிலங்களுக்கு அதிகபட்ச விலை தருவதாக கூறினார்கள். தற்போது பத்திரப்பதிவுப்படி தருவதாக கூறுகிறார்கள்.

சுமார் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய, கால்நடை மேய்ச்சல் நிலங்களை நாங்கள் 3 தலை முறைகளாக அனுபவித்து வருகிறோம்.

பல்வேறு வகையான விவசாய நிலங்கள், ஆடு, மாடுகளுக்கான மேய்ச்சல் நிலங்களை இழப்பது எங்களுக்கு மனரீதியாக மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

எனவே அரசு பத்திரப்பதிவுப்படி நிலங்களுக்கான இழப்பீடு வழங்கும் முடிவை பரிசீலனை செய்து நிலங்களுக்கு கூடுதல் மதிப்பு தரவேண்டும். 

மேலும் ராக்கெட் ஏவுதள மையத்தில் கூடல்நகர் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.எங்களுக்கு புதிதாக வழங்கப்படும் நிலத்தில் அரசு அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News