ஆன்மிகம்
ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடவும் தர்ப்பண பூஜை செய்யவும் குவிந்த பக்தர்கள் கூட்டம்.

ராமேசுவரம் கோவிலில் ஸ்படிக லிங்க தரிசனத்துக்கு மீண்டும் அனுமதி

Published On 2021-09-28 06:58 GMT   |   Update On 2021-09-28 06:58 GMT
ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கோவிலுக்கு வந்த பெரும்பாலான பக்தர்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்தனர்.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் கொரோனா 2-வது அலை பரவலின் போது அமல்படுத்திய ஊரடங்கினால், ஸ்படிக லிங்க தரிசனத்துக்கு கடந்த மே மாதம் தடை விதிக்கப்பட்டது.

ஊரடங்கு தளர்வினால் தற்போது பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், தினமும் காலை 5 முதல் 6 மணி வரை நடைபெறும் ஸ்படிக லிங்க தரிசனத்திற்கு இதுவரை பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

கொரோனா தொற்று குறைந்ததன் எதிரொலியாக 140 நாட்களுக்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் நேற்று முதல் ஸ்படிக லிங்க தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை 4.30 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு பின்பு 5 மணிக்கு தொடங்கப்பட்ட ஸ்படிகலிங்க தரிசனத்திற்கு பக்தர்கள் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்று காண வரிசையில் சென்றனர். 6 மணி வரை ஸ்படிக லிங்க தரிசனம் செய்தனர். நேற்று 1,600 பேர் ஸ்படிக லிங்க தரிசனம் செய்தனர்.

மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்றும் ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சாமி தரிசனம் செய்ய கோவிலின் முதல் பிரகாரம் மற்றும் கோவிலின் கிழக்கு வாசல் ரதவீதி சாலை உள்ளிட்ட இடங்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதேபோல் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட மற்றும் திதி தர்ப்பண பூஜை செய்யவும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கோவிலுக்கு வந்த பெரும்பாலான பக்தர்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்தனர். இதையடுத்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News