செய்திகள்
ராமதாஸ்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் வயது வரம்பை நீக்க வேண்டும்- ராமதாஸ்

Published On 2021-09-11 09:06 GMT   |   Update On 2021-09-11 09:06 GMT
ஆசிரியர் பணியை எதிர்ப்பார்த்துக் காத்திருந்த பட்டதாரிகளுக்கு இது மகிழ்ச்சியான செய்தி தான் என்றாலும் கூட, அப்பணிக்கு புதிதாக வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பது பெரும்பான்மையான பட்ட தாரிகளின் ஆசிரியர் பணி கனவை தகர்த்திருக்கிறது.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு மேல் நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை ஆன்லைன் போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுத்து நியமனம் செய்வதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆனால், 40 வயதைக் கடந்த பட்டதாரிகள் இதில் பங்கேற்க முடியாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.

ஆசிரியர் பணியை எதிர்ப்பார்த்துக் காத்திருந்த பட்டதாரிகளுக்கு இது மகிழ்ச்சியான செய்தி தான் என்றாலும் கூட, அப்பணிக்கு புதிதாக வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பது பெரும்பான்மையான பட்ட தாரிகளின் ஆசிரியர் பணி கனவை தகர்த்திருக்கிறது.

ஓரு பணிக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டுமானால், அந்தப் பணிக்கான நியமனங்கள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் 2011 முதல் 2020 வரையிலான பத்தாண்டுகளில் 2013, 2014, 2019 என மூன்று முறை மட்டும் தான் முதுநிலை ஆசிரியர் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. ஆண்டுக்கு ஒருமுறை ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளாத அரசுக்கு அதற்கான வயது வரம்பை நிர்ணயிக்க உரிமையில்லை; வயது வரம்பு நீக்கப்பட வேண்டும்.

ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட போது அதை தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்தார் . ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயிக்கும் பள்ளிக்கல்வித்துறையின் 12-ம் எண் அரசாணை ரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அந்த வகையில் இந்த சிக்கலின் தீவிரம் அவருக்கு தெரியும் என்பதால் ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை நீக்க ஆணையிட வேண்டும். ஓராண்டு பணி செய்யும் தகுதியுடைய அனைவரும் ஆசிரியர் பணி போட்டித் தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News