செய்திகள்
கேஎஸ் அழகிரி

ராகேஷ் அஸ்தானாவை, டெல்லி போலீஸ் ஆணையராக பிரதமர் நியமிப்பதா? கேஎஸ் அழகிரி கண்டனம்

Published On 2021-07-29 07:34 GMT   |   Update On 2021-07-29 08:37 GMT
பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ராகேஷ் அஸ்தானாவுக்கு தொடர்ந்து பதவி கொடுத்துக் காப்பாற்றி வரும் மோடி அரசின் சாயம் இதன்மூலம் மீண்டும் வெளுத்திருக்கிறது என கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது, அப்போதைய சி.பி.ஐ. இயக்குநராக இருந்த அலோக் குமார் வர்மா நடவடிக்கை எடுத்துவிடாமல் தடுக்க பல வழிகளை மோடி அரசு கையாண்டதை நாடு அறியும்.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பரிந்துரையின் அடிப்படையில் அலோக் வர்மாவையும் ராகேஷ் அஸ்தானாவையும் கட்டாய விடுப்பில் அனுப்பிய நாடகம் அரங்கேறியது.

ரபேல் ஒப்பந்தம் ஊழல் தொடர்பான ஆவணங்களை சேகரித்ததால் தான் அலோக் வர்மா மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, மோடி அரசு மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். அலோக் வர்மாவுக்கு எதிரான மோடி அரசின் நடவடிக்கைகளும் இந்த குற்றச்சாட்டை உறுதி செய்வதாகவே அமைந்தன.

மீண்டும் சி.பி.ஐ. இயக்குநர் பதவியில் அலோக் வர்மா அமர்ந்தார். அதன்பிறகு அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க பிரதமர் மோடி தலைமையில் தேர்வுக் கூட்டம் நடந்தது. அவர் மீதான குற்றச்சாட்டு எதையும் விசாரிக்காமல், சி.பி.ஐ. இயக்குநர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை நீக்கி ஜனநாயகப் படுகொலையை மோடி அரங்கேற்றினார்.

அதேசமயம், கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எல்லைப் பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் பதவியை மோடி அரசு வழங்கியது.


2018-ம் ஆண்டு மொயின் குரேஷி ஊழல் வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர் சனா சதீஷ், இடைத்தரகர்கள் மூலம் ராகேஷ் அஸ்தானாவுக்கு ரூ. 2.95 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

உச்சக்கட்ட நிகழ்வாக, வரும் 31-ந் தேதி பணியில் இருந்து ஓய்வு பெறவிருந்த ராகேஷ் அஸ்தானாவை, டெல்லி காவல் துறை ஆணையராக மோடி அரசு நியமித்துள்ளது.

பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவருக்கு, தொடர்ந்து பதவி கொடுத்துக் காப்பாற்றி வரும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் சாயம் இதன்மூலம் மீண்டும் வெளுத்திருக்கிறது. நேர்மையான அதிகாரியான அலோக் வர்மாவை பதவியிலிருந்து நீக்கிவிட்டு, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவரை அரவணைப்பதன் மூலம் பதவியில் தொடரும் தார்மீக உரிமையைப் பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இழந்துவிட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்...விஜய் மல்லையாவை திவாலானவராக அறிவித்தது லண்டன் ஐகோர்ட்

Tags:    

Similar News