செய்திகள்
நீட் தேர்வு

தமிழ்நாட்டில் 18 நகரங்களில் நாளை ‘நீட்’ தேர்வு

Published On 2021-09-11 09:35 GMT   |   Update On 2021-09-11 09:35 GMT
கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்வு மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகளுக்கு உடல் வெப்பநிலை, ரத்த ஆக்சிஜன் அளவு ஆகியவை பரிசோதிக்கப்படுகிறது.
சென்னை:

எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண் அடிப்படையில் அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படுகிறது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக 2-வது ஆண்டாக நீட் தேர்வுதாமதமாக நடைபெறுகிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேசிய தேர்வு முகமை நாளை (12-ந்தேதி) நாடு முழுவதும் இத்தேர்வினை நடத்துகிறது.

தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, வேலூர், நெல்லை, திருப்பூர், சேலம், கடலூர், காஞ்சிபுரம், கரூர், நாகர்கோவில், நாமக்கல், தஞ்சாவூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய 18 நகரங்களில்
நீட் தேர்வு நடக்கிறது. இந்த ஆண்டு தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி 5 மணிக்கு முடிகிறது.

வழக்கமாக நீட் தேர்வுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அதுபோல இந்த வருடமும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றுடன் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன.

தமிழகத்தில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வு நடைபெறும் நகரங்களில் அதற்கான ஏற்பாடுகளை தேசிய கல்வி முகமை ஒருங்கிணைப்பாளர்கள் செய்துள்ளனர்.


கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்வு மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகளுக்கு உடல் வெப்பநிலை, ரத்த ஆக்சிஜன் அளவு ஆகியவை பரிசோதிக்கப்படுகிறது.

மேலும் மாணவர்கள் தங்கள் கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்திய பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். உடல் வெப்பநிலை பரிசோதனையின் போது இயல்பான அளவைவிட அதிக வெப்பநிலையை கொண்ட மாணவர்களை தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தேர்வு எழுதுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களுக்கு கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் ஏதும் இல்லை என்று உறுதி செய்து கையொப்பம் இட வேண்டும்.

சொந்தமாக கிருமிநாசினி மற்றும் தண்ணீர் பாட்டில் கொண்டுவர வேண்டும். புகைப்படத்துடன் கூடிய ஹால் டிக்கெட், அரசு வழங்கிய அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.

தேர்வு மையத்துக்குள் மின்னணு பொருட்கள் கொண்டுவர அனுமதியில்லை. முழுக்கை சட்டை, ஷூ, சாக்ஸ், நகைகள் அணிந்துவரக் கூடாது. சாதாரண செருப்புகள் மட்டுமே அணிந்திருக்க வேண்டும் என்பது குறித்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் 33 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. 17 ஆயிரத்து 996 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

இதன் ஒருங்கிணைப்பாளர்களாக பவன்ஸ் பள்ளி முதல்வர் சுப்பிரமணியன், சின்மயா வித்யாலயா முதல்வர் கவுரி லட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வையொட்டி சென்னையில் மாநகர பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.

Tags:    

Similar News